வகுப்பறையில் மாணவியின் காலைச் சுற்றிய பாம்பு... திக் திக் நிமிடங்கள்; மருத்துவமனையில் சிகிச்சை!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் மங்காரா பகுதியில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, நான்காம் வகுப்பு மாணவி ஒருவர் வழக்கம் போல் வகுப்பறையில் தனது இருக்கையில் அமர்ந்துள்ளார். அங்கு வேகமாக ஊர்ந்து வந்த பாம்பு ஒன்று, மாணவியின் கால்களை பற்றி ஏறியது; திடீரென அவரது கால்களை பின்னிக் கொண்டுள்ளது.

இதை சற்றும் எதிர்பாராத மாணவி, பாம்பு தனது கால்களை சுற்றிக் கொண்டுள்ளதை பார்த்து பீதியில் கூச்சலிட்டார். அதை விரட்டுவதற்காக, தனது கால்களை வேகமாக உதறினார். மாணவியின் கூச்சல் மற்றும் கால்களின் அசைவால் பாம்பு திடீரென மாணவியின் கால்களை விடுவித்து வகுப்பறைக்குள் இருந்த அலமாரியின் அடியில் சென்று மறைந்து கொண்டது.

சிகிச்சை - சித்தரிப்பு படம்

இதனிடையே, மாணவியின் அலறலால் வகுப்பறையே பரபரப்பானது. சத்தம் கேட்டு அங்கு ஓடி அந்த ஆசிரியர்கள், நடந்த சம்பவத்தை பார்த்து பதறினர். மாணவியிடம் நடந்தவற்றை விசாரித்தனர். ஆசிரியர்கள் அலமாரியின் அடியில் பதுங்கிய பாம்பை லாகவமாகப் பிடித்தனர். அத்துடன், மாணவியை பாம்பு கடித்திருக்கலாம் என்ற அச்சத்தில் பள்ளி நிர்வாகம் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி உடலில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை என கூறியதோடு, 24 மணி நேரம் அவரை மருத்துவமனை கண்காணிப்பில் வைத்திருக்க அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, மாணவி மருத்துவமனை கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

பாதிக்கப்பட்ட மாணவி, ’பாம்பு என் காலை சுற்றிய பிறகுதான், அதை கவனித்தேன். பாம்பை பார்த்த அதிர்ச்சியில் சத்தமாக கத்திய பின், கால்களை வேகமாக அசைத்தேன். இதனால், பாம்பு என் கால்களை விடுவித்து, அலமாரிக்கு அடியில் சென்றுவிட்டது’ என்று விலகாத அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

பாம்பு - சித்தரிப்பு படம்

கடந்த 2019-ம் ஆண்டு வயநாடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவி வகுப்பறையில் இருந்தபோது, பாம்பு கடித்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சூழலில், மீண்டும் அது போல் ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/FyN6kAz

Post a Comment

0 Comments