பணி நிரந்தரம் வழங்கக் கோரியும், தங்களது பணிக்கு ஏற்ற ஊதியம் வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கர்நாடகாவின் ’பௌரகர்மிக்காஸ்’ (Pourakarmikas) எனப்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு கர்நாடக முதல்வர் நிரந்தர வேலை அந்தஸ்து வழங்கும் நடவடிக்கையை எடுக்குமாறு நகராட்சி நிர்வாகத் துறைக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கர்நாடக மாநிலத்தில், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக் கோரியும், ஊதியத்தை அதிகரிக்கக் கோரியும் 15,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ’ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே’ என்ற அமைப்பும் (பிபிஎம்பி), பௌரகர்மிகர சங்கதனேகல ஜாந்தி ஹோரடா சமிதி அமைப்பும் இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன. இந்நிலையில் நிரந்தர வேலைக்கான அந்தஸ்தை மூன்று மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி நிர்வாகத்திற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். மேலும், ’நேரடி ஊதியத்தில் பணிபுரிபவர்களின் சேவைகளை மாநில அரசு முறைப்படுத்தும். சமூகப் பாதுகாப்பு, மருத்துவச் சேவை, குழந்தைகளின் கல்விக்கான உதவிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளோம். அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த அம்சங்களுக்கு தேவையான விதிகள் வகுக்கப்படும்’ என்று கூறினார்.
முதல்வரின் இந்த உத்தரவிற்கு பின் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர். முன்னதாக அவர்கள் பேசுகையில், ’எங்களின் பணிக்காக ரூபாய் 18,000 தருவதாகக் கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு ரூபாய் 12,000 மட்டுமே கையில் கிடைக்கிறது. இதுமட்டும் இல்லாமல் எங்கள் பிஎஃப் எண் எங்களுக்குத் தெரியாது, எங்கள் பணம் எங்கே போகிறது என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் இறந்தாலும் இங்கேயே உட்கார்ந்திருப்போம், யாரும் எங்கள் பேச்சைக் கேட்பதில்லை’ என்று தெரிவித்தனர்.
பணியாளர்களின் போராட்டங்களை ஆதரித்த எதிர்க்கட்சிகளில் ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) அடங்கும். ’போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்கள் ஒரு நாள் க வேலை செய்ய மறுத்தால், மாசு பிரச்னை அதிகமாகி, மக்கள் மூக்கை மூட வேண்டிய நிலை ஏற்படும். துப்புரவு பணியாளர்களுக்கு சொற்ப சம்பளமே வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்தில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எனவே, அவர்களது பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்’ என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநில துணைத் தலைவர் பாஸ்கர் ராவ் செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/5HiXxIU
0 Comments