வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் பல லட்சம் மோசடி; கர்நாடக இளைஞர் கைது - காதலியை தேடும் போலீஸார்

ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் என்பவருடைய மனைவி மனோஜா.‌ இவர் ஆன்லைன் மூலம் வேலை வாங்கி தருவதாக ஒருவர் கூறியதை நம்பி ரூ.25 ஆயிரத்தை ஏமாந்துள்ளார். இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நபரின் செல்போன் எண்கள், பணம் பரிவர்த்தனை செய்த வங்கி கணக்குகள் உள்ளிட்டவைகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் அவை கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்தவை தெரிய வந்தது.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி‌. தங்கதுரை உத்தரவின் பேரில், சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மேற்பார்வையில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் தலைமையிலான போலீஸார் கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு விரைந்தனர்.

கைது செய்யப்பட்ட மாருதி

அங்கு அந்த நபரின் செல்போன் எண் சிக்னலை தொடர்ந்து சென்றதில் அது பெங்களூர், நாகர்பாவி, பாரப்பட்டிபாளையம் அருகில் உள்ள ஒரு தனியார் காம்ப்ளக்ஸிற்குள் செயல்பட்டு வரும் 'குலோபல் லிங் டெக்’ என்ற நிறுவனத்திற்குள் சென்றுள்ளது. அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் போலீஸார் வருவதை கண்டு தப்பி ஓடியுள்ளார். அவரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தியதில் அவரின் பெயர் மாருதி என்பதும், போலி நிறுவனம் நடத்தி ஆன்லைன் மூலம் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்துவந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த இரண்டு லேப்டாப்புகள், 5 ஆண்ட்ராய்டு செல்போன்கள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ராமநாதபுரம் கொண்டு வந்தனர்.

ராமநாதபுரத்தில் வைத்து தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நம்மிடம் பேசிய சைபர் கிரைம் போலீஸார், கர்நாடக மாநிலம், ராம்நகரா பச்சனத்தி கிராமத்தை சேர்ந்த பி.காம் பட்டதாரி மாருதி. கல்லூரி படிப்பை முடித்து தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் data entry operator ஆக பணியாற்றி வந்துள்ளார். அப்போது,வேலை வாங்கி தருவதாக பொதுமக்களை எளிதாக ‌ ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாம் என அந்த நிறுவனத்தில் இருந்து வெளியே வந்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லேப்டாப்கள், செல்போன்கள் மற்றும் பணம்

பின்னர் கல்லூரி காதலியான எசாசினி என்பவருடன் சேர்ந்து ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கு இரண்டு லேப்டாப்கள், ஏழு செல்போன்கள், போலியான பெயர்களில் சிம்கார்டுகள் வாங்கி 'குளோபல் லிங்க் டெக்' என்ற போலியான நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும் தமிழ் மற்றும் கன்னடம் தெரிந்த ஐந்து பெண்களை டெலி காலர்களாக வேலைக்கு அமர்த்தி உள்ளனர். அவர்களுக்கு வேலை வாங்கி தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பேசுவதற்கு காதலியான எசாசினி பயிற்சி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மாருதி ரூ.30 ஆயிரம் பணம் செலுத்தி Quickr.com என்ற தனியார் இணையதளத்தில் வேலை தேடுபவர்களின் பெயர் முகவரிகளை பெற்று காதலி எசாசினியிடம் கொடுத்துள்ளார்.

அதில் தமிழர்களாக இருந்தால், தமிழ் தெரிந்த பெண் டெலி காலர் மூலமாகவும், கன்னடராக இருந்தால் கன்னடம் தெரிந்த பெண் டெலி காலர் மூலமும் தகுதிக்கேற்ற வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, registration fees, application fees, processing fees, documentation fees, refund charges என வசூல் செய்துள்ளனர்.
அதன்படி இதுவரை ரூ.10 லட்சம்வரை மோசடி செய்து சம்பாதித்துள்ளனர். அந்த பணத்தை கொண்டு இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மாருதியை ராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் அவருடைய காதலி எசாசினியை கர்நாடக போலீஸார் உதவியுடன் தமிழக சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/hPJl5nb

Post a Comment

0 Comments