``ஆங்கிலேயர்கள் கூறியதை அரசியலமைப்பில் எழுதிவைத்துள்ளனர்" - சர்ச்சை பேச்சால் கேரள அமைச்சர் ராஜினாமா

கேரள மாநிலத்தில் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றிபெற்று சி.பி.எம் ஆட்சியை பிடித்துள்ளது. பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சர்களை மாற்றிவிட்டு இந்த முறை புதியவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தார் பினராயி விஜயன். பிரனாயி விஜயன் 2.0 ஆட்சி ஓராண்டு கடந்த நிலையில் அமைச்சர்கள் சர்சையில் சிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் சி.பி.எம் கட்சி சார்பில் பத்தனம்திட்டா மல்லப்பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாராந்திர அரசியல் கண்காணிப்பு கூட்டத்தில் கேரள மீன்வளத்துறை அமைச்சர் ஷாஜி செரியன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஷாஜி செரியன், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களை கொள்ளையடிப்பதற்கே உதவுகிறது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூறியதைத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதிவைத்துள்ளனர். சாதாரண மக்களை சுரண்டுவதுதான் இதன் நோக்கம்" என பேசியுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் ஷாஜி செரியன்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக அமைச்சர் ஷாஜி செரியன் பேசியதற்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அமைச்சர் ஷாஜி செரியன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன் உள்ளிடோர் கவர்னர் ஆரிஃப் முகமதுகானை சந்தித்து மனு அளித்தனர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் அமைச்சர் ஷாஜி செரியன் பேசிய விவகாரம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவருவதாகவும், சபையை நிறுத்திவைத்து விவாதிக்க வேண்டும் எனவும் கூறினர். ஆனால், கேள்வி நேரம் முடிந்த பிறகுதான் அதுபற்றி விவாதிக்க முடியும் என சபாநாயகர் தெரிவித்தார். ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு உடனடியாக அனுமதி தரவேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் அமளி செய்ததை அடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே அமைச்சர் ஷாஜி செரியனின் பேச்சு குறித்து ஆளுநர் முதல்வரிடம் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தான் அரசியல் அமைப்புக்கு எதிராக பேசவில்லை என்றும், அரசு நிர்வாகத்துக்கு எதிராகவே பேசினேன் எனவும் ஷாஜி செரியன் கூறியிருக்கிறார். ஆனாலும் அந்த விளக்கத்தை ஏற்காத சி.பி.எம் தலைமை ஷாஜி செரியன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஷாஜி செரியன், "கடந்த 3-ம் தேதி மல்லப்பள்ளியில் சி.பி.எம் ஏரியா கமிட்டி சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நான் பேசியது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என செய்திகள் வெளியாகி வருகின்றன. நம் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்கும் அரசியல்வாதி நான். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என உறுதிபூண்டவர்கள் சி.பி.எம் கட்சியினரும், இடதுசாரிகளும்.

ஷாஜி செரியன்

கடந்த 42 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கடைபிடித்து வருகிறேன். என்னை தவறாக காட்டும் பிரசாரங்கள் நடக்கின்றன. ஒரு மணி நேரம் நான் பேசியதின் சில பகுதிகளை எடிட் செய்து பரப்புகின்றனர். நான் பேசியதை தவறாக சித்திரித்து இடதுசாரி அரசை பலவீனப்படுத்த முயல்கிறார்கள். நான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசவில்லை என்பதை மீண்டும் கூறுகிறேன். இந்த நிலையில் நான் சுயமாக ஒரு முடிவு எடுத்துள்ளேன். அமைச்சர் பதவியில் இனியும் நான் தொடர்வது நல்லதல்ல என முடிவு செய்துள்ளேன். எனவே எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு அனுப்பியுள்ளேன்" என்றார். அமைச்சர் ஷாஜி செரியன் ராஜிநாமா செய்துள்ளது பினராயி விஜயன் 2.0 ஆட்சியில் முதல் விக்கெட் என எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/znXkML9

Post a Comment

0 Comments