மும்பை கிழக்குப் பகுதியில் உள்ள விக்ரோலியில் வசிப்பவர் ஷியாம் ஹண்டே(26). இவர் அதே பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தார். இது குறித்து தெரிந்துகொண்ட அந்தப் பெண்ணின் பெற்றோர் ஹண்டேமீது போலீஸில் பாலியல் புகார் கொடுத்தனர். இதனால் போலீஸார் வழக்கு பதிவுசெய்து ஹண்டேயை கைதுசெய்து பல மாதங்கள் சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த பிறகு ஹண்டே மீண்டும் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். ஆனால் அவரின் முன்னாள் காதலி மீண்டும் ஹண்டேவுடன் பேசுவதற்கு முயற்சி செய்தார். இதனால் பழைய வீட்டை காலி செய்துவிட்டு ஹண்டே வேறு இடத்துக்குச் சென்று, உணவு டெலிவரி வேலை செய்துவந்தார். இதனை தெரிந்து கொண்ட அந்தப் பெண் ஹண்டேவை மீண்டும் தன்னுடன் பேச வைக்க அவரது இரு சக்கர வாகனத்தை திருட முடிவுசெய்தார்.
இருவரும் காதலர்களாக இருந்தபோது ஹண்டேவின் இரு சக்கர வாகனத்தின் சாவி ஒன்று அந்தப் பெண்ணிடம் இருந்தது. அந்த சாவியை தன் ஆண் நண்பர் ஒருவரிடம் கொடுத்து ஹண்டேவின் பைக்கை திருடச் சொன்னார். அந்த நபரும் பைக்கை திருடி அவரிடம் கொடுத்துவிட்டார். பைக்கை கோவண்டி என்ற இடத்தில் அந்தப் பெண் மறைத்து வைத்துக்கொண்டார். பைக் காணாமல் போனது குறித்து ஹண்டே போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது, பைக் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸார் வழக்கை முடித்துவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக ஹண்டேவின் முன்னாள் காதலி ஹண்டேவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில், ``மீண்டும் என்னுடன் பேச ஆரம்பித்தால், காணாமல் போன உன்னுடைய பைக் எங்கிருக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும்" என்று குறிப்பிட்டிருந்தார். உடனே ஹண்டே இது குறித்து போலீஸில் தெரிவித்தார். போலீஸார் அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டார். அதையடுத்து அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு பைக் இருக்கும் இடத்துக்குச் சென்றால் அங்கு பைக் இல்லை. இதையடுத்து போலீஸார் மேற்கொண்டு விசாரித்ததில் பைக்கை டிராஃபிக் போலீஸார் எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்தப் பெண்ணை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/kKCrGFe
0 Comments