விருதுநகர்: கிஸான் ரேஷன் ஷாப்; மத்திய அரசின் பெயரில் கோடிக்கணக்கில் மோசடி - உ.பி. வரை நீண்ட விசாரணை

விருதுநகரில், மத்திய அரசின் பெயரை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய்க்கு பருப்பு கொள்முதல் செய்து மோசடியில் ஈடுபட்டவர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். விருதுநகரில் ஆரம்பித்து உத்திரபிரதேசம் வரை நீண்டு முடிந்துள்ள இந்த பரபரப்பு சம்பவம் குறித்து மாவட்டக்குற்றப்பிரிவு போலீஸாரிடம் நேரில் பேசினோம்,

``விருதுநகரை அடுத்த ரோசல்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரின் மனைவி தனலட்சுமி. ரோசல்பட்டியில் தனலட்சுமி டிரேடர்ஸ் எனும் பெயரில் பருப்பு மொத்த கொள்முதல் வியாபாரம் செய்து வருகிறார். ராஜகுமாருக்கு சொந்தமாக விருதுநகரில் 4 பருப்பு அரவை மில்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த 18.03.2021 அன்று, விருதுநகரை சேர்ந்த பருப்பு வியாபாரிகளான முருகேசன், ஹரிஹரன் ஆகியோர் சேர்ந்து ராஜ்குமார்-தனலட்சுமி தம்பதியினரை சந்தித்துள்ளனர். அப்போது பேசியவர்கள், தாங்கள் மத்திய அரசின் கீழ் செயல்படும்‌ 'கிஸான் ரேஷன் ஷாப்' நிறுவன பர்ச்சேஸ் இன்சார்ஜ்கள் என அறிமுகப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து, அரசு இலச்சினை கொண்ட அடையாள அட்டைகளை காண்பித்து அவர்களை நம்பவைத்துள்ளனர்.

ஜெயகணேஷ்

``பருப்பு மொத்த கொள்முதல் வியாபாரிகளிடமிருந்து மானிய விலைக்கு பருப்பு கொள்முதல் செய்து, அதனை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கிஸான் ரேஷன் ஷாப் வழியாக பொதுமக்களுக்கு சரியான விலையில் வழங்கும் திட்டத்தை பற்றி சொல்ல வந்துள்ளோம். உங்களிடம் கொள்முதல் செய்யும் பாசிப்பருப்பு, பாசிப்பயிறு, பட்டாணிப்பருப்பு, உளுந்துப்பருப்பு, கடலைப்பருப்பு உள்ளிட்டவைகளுக்கு இரண்டொரு நாளில் பில் கிளியரன்ஸ் கொடுத்து பணத்தை செட்டில்மென்ட் செய்கிறோம். இதில் உங்களுக்கு சம்மதம் என்றால் எங்கள் நிறுவனர் மற்றும் மேலாளர்களை நேரடியாக பேச அழைத்து வருகிறோம்” என கூறியுள்ளனர்‌.

இதை நம்பிய, ராஜ்குமார்-தனலட்சுமி தம்பதியினர், 'கிஸான் ரேஷன் ஷாப்' நிறுவனர் மற்றும் மேலாளரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, 20.03.2021-அன்று கிஸான் ரேஷன் ஷாப் சேர்மன் என கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ஜெயகணேஷ் என்பவரும், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவை அடுத்துள்ள ஓடைப்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன்‌ மேனேஜிங் டைரக்டர் எனவும் ராஜ்குமார் தம்பதியை சந்தித்து அறிமுகமாகியுள்ளனர். தொடர்ந்து, கிஸான் ரேஷன் ஷாப் திட்டம் பற்றி பல்வேறு ஆங்கில நாளேடுகளில் வெளிவந்த பேப்பர் கட்டிங்குகள், விளம்பரங்கள், தமிழகத்தில் மற்ற பகுதியில் பருப்பு மொத்த வியாபாரியிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆவணங்கள், செட்டில்மென்ட் கணக்கு விவரங்கள், அலுவலக தொடர்பு விவரங்கள், குடோன், சரக்கு சப்ளை என அவர்களை நம்பவைக்கும் விதமாக அனைத்தையும் காட்டியுள்ளனர்.

டெண்டர் பத்திரம்

இதை முழுசாக நம்பிய ராஜ்குமார் தம்பதியினர், கிஸான் ரேஷன் ஷாப் திட்டத்தில் சேர்ந்து தொழில் செய்ய விருப்பம் தெரிவித்து டெண்டர் போட்டுள்ளனர். அதன்படி, 28.03.2021-ல் 50 கிலோ மூடைகளாக 400 மூடைகளில் ரூ.19 லட்சத்து 30ஆயிரம் மதிப்புள்ள பாசிப்பருப்பு, பாசிப்பயிறு ஆகியவற்றை ஜெயகணேஷ் கொடுத்த பொள்ளாச்சி கிஸான் ரேஷன் ஷாப் குடோன் முகவரிக்கு ராஜ்குமார் அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து 29.03.2021-ல் 300 மூடைகளில் ரூ.14 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள பருப்புகளை கள்ளிக்குடி குடோனிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

போலி அடையாள அட்டை

இப்படியாக, 28.03.2021 முதல் 30.06.2021 வரை ரூ.5,01,7,400 மதிப்பு பருப்பு மூடைகள் தேவையின் அடிப்படையில் ஜெயகணேஷ் கொடுத்த முகவரிக்கு ராஜ்குமார் தம்பதியினர் அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் இவை எதற்கும் பில் பாஸ் செய்து பணம் கொடுக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராஜ்குமார் இதுகுறித்து, ஜெயகணேஷ், பாண்டியராஜனிடம் கேட்டுள்ளார். அப்போது, ``பில்கள் அனைத்தும் கையெழுத்துக்காக கோப்பில் வைக்கப்பட்டுள்ளது. சீக்கிரமாக செட்டில்மென்ட் ஆகிவிடும். நீங்கள் மேலும் சரக்குகளை அனுப்பி வையுங்கள் கட்டாயம் அதற்கும் சேர்த்து பணம் தந்துவிடுவோம்” என ராஜ்குமாரை சமாதானப்படுத்தியுள்ளனர். ஆனால் இதை நம்ப மறுத்து, `பணம் வந்தால் தான் இனி கிஸான் ரேஷன் ஷாப் நிறுவனத்துக்கு சரக்குகள் அனுப்புவேன்’ என ராஜ்குமார் கூறியுள்ளார்.

இதனால் திகைத்துப்போன அவர்கள், ராஜ்குமாரை நம்ப வைப்பதற்காக பாண்டியராஜனின் வங்கி கணக்கு மற்றும் அவருக்கு சொந்தமான ஜெயா டிரேடர்ஸ் நிறுவனக் கணக்கு மூலமாக 2 கோடியே 15 லட்ச ரூபாயை செட்டில்மென்ட் தொகையாக கொடுத்துள்ளனர். மீதி 2 கோடியே 86 லட்சத்து 7 ஆயிரத்து 40-ஐ பிறகு தருவதாக சமாளித்துள்ளனர். இருப்பினும் சந்தேகம் தீராத ராஜ்குமார், அவர்களை பற்றி தனியே விசாரித்துள்ளார். இதில் அடுத்த சில நாள்களிலேயே, தன்னிடம் கொள்முதல் செய்த பருப்பை விருதுநகர் மார்க்கெட்டில் உள்ள கே.ஆர்.டிரேடர்ஸ், கார்த்திகா ஸ்ரீ டிரேடர்ஸ், வி.வி.டி.கோகுல் அன்ட் கோ ஆகிய நிறுவனங்களுக்கு கிஸான் ரேஷன் ஷாப் நிறுவனத்தினர் கள்ளசந்தையில் குறைந்த விலைக்கு உடனுக்குடன் விற்று பணம் சம்பாதித்திருப்பதை தெரிந்துக்கொண்டார்.

கள்ளச்சந்தையில் பருப்பு மொத்த விற்பனைக்கு வாங்குவோருக்கு குறைவான விலையும், அதேப் பருப்பை கடைகளில் ரீ-சேல் பாயிண்டுக்கு பாக்கெட்டுகளில் அடைத்து அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் தான் மோசடி செய்யப்பட்டதற்கு நியாயம் கேட்டும், பருப்பு கொள்முதலுக்கான மீதத்தொகையை செட்டில்மென்ட் செய்யச்சொல்லிக்கேட்டும் ராஜ்குமார் தம்பதியினர் உறவினருடன் பாண்டியராஜனை சந்தித்துள்ளனர்.

போலி விண்ணப்பம்

அப்போது பாண்டிராஜன், அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பயந்துபோன அவர்கள், பருப்பு கொள்முதல் மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் தனலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினோம்.

விளம்பரம்

போலீஸாரின் விசாரணையில், ஜெயகணேஷ், பாண்டியராஜன் சேர்ந்து தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்று மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. சென்னையை சேர்ந்த பருப்பு வியாபாரி பாலாஜி என்பவரை ஏமாற்றி 3 கோடியே 65 லட்சத்து 42 ஆயிரத்து 920 ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீஸூம் வழக்குப்பதிவு செய்து ஜெயகணேஷை தேடி வந்தனர்.

இந்தநிலையில் அவர், உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி, அங்குச்சென்ற போலீஸார் ஜெயகணேஷை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, பாண்டியராஜனும் சென்னை போலீஸால் கைது செய்யப்பட்டு தற்போது இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஜெயகணேஷ் பா.ஜ.க.கட்சி பிரமுகர் ஆவார். அவர், உத்திரபிரதேசத்தில் அரசியல் பின்புலத்தில் உள்ள ஒருவரின் பாதுகாப்பிலேயே பதுங்கியிருந்துள்ளார்.

பாஜக கட்சியினருடன்

அதையெல்லாம் மீறித்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின்படி, இந்த பண மோசடியில் ஜெயகணேஷின் தந்தை ராஜேந்திரன், பாண்டியராஜனின் மனைவி உமா, விருதுநகரில் கள்ளச்சந்தையில் பருப்பு வாங்கியவர்களான வி.வி.டி.கோகுல் அன்ட் கோ உரிமையாளர் விக்னேஷ் என்ற விக்கி, கார்த்திகா டிரேடர்ஸ் உரிமையாளர் கருமாரிக்கனி ஆகியோருக்கும் பங்கிருப்பது தெரியவந்தது. எனவே அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விக்னேஷ் என்ற விக்கி, கருமாரிக்கனி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகிறோம்" என்றனர்.

அடிப்படை தேவையான உணவுப்பொருளில் நடக்கும் இந்த மோசடியை இன்னும் தீர ஆராய்ந்து அரசு தடுத்திட வேண்டும்!



from தேசிய செய்திகள் https://ift.tt/3AOaul9

Post a Comment

0 Comments