போபாலில், பள்ளி மாணவர்கள் தங்கள் பையில் அதிக சுமை சுமந்து செல்வதாக பெற்றோர்கள் உணர்ந்தால் அருகில் உள்ள மாவட்ட சட்ட சேவை ஆணையத்தில் புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிப்பவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், மாவட்ட சட்ட சேவை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 2020-ம் ஆண்டு, ’பள்ளி படிக்கும் மாணவர்களின் புத்தக பைகளால் பள்ளி மாணவர்களின் தோள்களில் அதிகம் சுமை ஏறுகிறது. இதனால் உடல்நிலை மற்றும் மன நிலையில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது’ எனக் கூறிய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தினமும் பள்ளியில் அன்றைக்கு தேவையான பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை மட்டுமே மாணவர்களை எடுத்து வரச் சொல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தது. ஆனால் அது பெரிதாகக் கடைப்பிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் மாவட்ட நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று தானாக முன்வந்து, குழந்தைகள் தினமும் பள்ளிக்குச் செல்லும் எடையைக் குறைக்கும் 'பள்ளிப் பை கொள்கை (School Bag Policy)'-ஐ அமல்படுத்தாததற்காக, போபால் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனுக்கான ’பள்ளி பை கொள்கை’யை பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பிய நீதிபதி பண்டேலா, மத்திய அரசு கூறிய பின்னும் ஏன் அதை நடைமுறைபடுத்தவில்லை என்று கேட்டார். மேலும் இதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் சமர்ப்பிக்கும்மாறும் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு உத்தவிட்டுள்ளார்.
இதனையடுத்து பெற்றோர்களிடம் பேசிய போபால் மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள், ‘மாணவர்கள் சுமக்கும் அதிக எடையுடைய புத்தகப் பையை பற்றிய புகாருக்கு பெற்றோர்கள் எங்களை நேரடியாக அணுகலாம். அவர்களின் அடையாளத்தை நாங்கள் வெளியிட மாட்டோம்’ என்று உறுதியளித்துள்ளனர். மேலும், ’மாணவர்களை கனமான பைகளை எடுத்து வரும் வகையில் கட்டாயப்படுத்தும் பள்ளிகளை நாங்கள் ஆய்வு செய்வோம். இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை. அத்தகைய பள்ளிகளுக்கு எதிராக பெற்றோருக்கு அனைத்து வகையான சட்ட உதவிகளையும் மாவட்ட கல்வி அலுவலகம் வழங்கும். பள்ளிகளுக்கு எதிராக புகார் அளிக்க நினைத்து, ஆனால் அதற்கு யாரை அணுகுவது என்று தெரியாமல் இருக்கும் பெற்றோர்கள் எங்களை அணுகலாம்’ என்று கூறியுள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/3juGJ6I
0 Comments