கேரள மாநிலம் திருவனந்தபுரம் காரக்கோணத்தில் உள்ள சி.எஸ்.ஐ மருத்துவ கல்லூரியில் நடந்த பண மோசடி சம்பந்தமாக அமலாக்கத்துறை நான்கு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. பிஷப் இல்லம் உள்ளிட்டவை அடங்கிய, தலைமையிடமான திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள எல்.எம்.எஸ் வளாகத்திலும், நெய்யாற்றின்கரை அருகே உள்ள சிறியகொல்லா பகுதியில் அமைந்துள்ள சபை செயலாளர் பிரவீணின் வீட்டிலும், காரக்கோணம் சி.எஸ்.ஐ. மெடிக்கல் காலேஜிலும், மெடிக்கல் காலேஜ் இயக்குநராக உள்ள ஸ்ரீகாரியம் பகுதியைச் சேர்ந்த பெனட் ஆபிரகாம் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்லும்போது சபை செயலாளர் பிரவீண் இல்லை என்றும், அவர் சென்னை சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
காரக்கோணம் சி.எஸ்.ஐ மெடிக்கல் காலேஜில் அட்மிஷன் சம்பந்தமாக ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்தே அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவக்கல்லூரியில் படிக்க மாணவர்களுக்கு சீட் வழங்குவதாக உறுதி அளித்தும், வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து பெற்றும், பணம் வாங்கியுள்ளனர். பின்னர் மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்காமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் மோசடி செய்துள்ளனர். இதுபற்றி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யும் ஃபீஸ் அத்தாரிட்டி கமிஷனில் மாணவர்கள் புகார் செய்தனர். ஃபீஸ் அத்தாரிட்டி கமிஷன் விசாரணையில் மாணவர்களிடம் இருந்து பணம் வாங்கியதாகவும், அந்த பணத்தை திரும்ப கொடுக்கலாம் என சி.எஸ்.ஐ பிஷப் தர்மராஜ் உறுதி கூறியிருக்கிறார்.
இதுபற்றி வெள்ளறடை மற்றும் மியூசியம் காவல் நிலையங்களில் மாணவர்கள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. இரண்டு காவல் நிலையங்களிலும் உள்ள வழக்குகள் பின்னர் க்ரைம் பிரான்ச் போலீஸுக்கு மாற்றப்பட்டது. க்ரைம் பிரான்ச் போலீஸ் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அந்த குற்றப்பத்திரிகையில், பணத்தை திரும்ப கொடுக்கலாம் என உறுதியளித்த பிஷப்பின் பெயர் இல்லை என்றும். க்ரைம் பிரான்ச் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நிராகரிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
பணம் மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு அளித்தனர். மேலும் சபைக்கு தெரியாமல் பிஷப் மற்றும் சபை நிர்வாகிகள் மாணவிகளிடம் பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டதாக சபை நிர்வாகிகள் சிலரும் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியும் பிஷப் உள்ளிட்டவர்கள் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே அமலாக்கத்துறை இன்று திடீர் சோதனையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபையை சீர்குலைக்கும் விதமாக ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாகவும். அதன் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை ரெய்டு நடப்பதாகவும் சி.எஸ்.ஐ சபையைச் சேர்ந்த போதகர் காட்வின் தெரிவித்துள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/5UlmJrn
0 Comments