மும்பையின் தென்பகுதியில் உள்ள மெரைன் டிரைவ் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் திருடன் ஒருவன் அதிகாலையில் திருடுவதற்காக பைப் வழியாக மேலே ஏறினான். அதிகாலை 5 மணிக்கு திருடனின் நடமாட்டத்தை கண்ட கட்டட வாட்ச்மென் உடனே அதில் வசிப்பவர்களை உஷார்படுத்தினார். கட்டடத்தில் வசிப்பவர்கள் அனைவரும் எழுந்தனர். திருடன் நான்காவது மாடியில் வெளியில் இருக்கும் பால்கனி போன்ற காங்கிரீட் தளத்தில் நின்று கொண்டிருந்தான். அந்த காங்கிரீட் பகுதி 3 அடிதான் இருக்கும். அவனை பிடிக்க பொதுமக்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
இதனால் திருடனை பத்திரமாக இறங்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். அதற்குள் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீஸார் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களும் திருடனை பத்திரமாக இறக்க முயன்றனர். ஏற்கனவே கடந்த சில நாள்களாக மழை பெய்து கொண்டிருந்ததால் திருடன் நின்ற இடம் மிகவும் ஈரமாக இருந்தது. எனவே திருடன் தவறி கீழே விழுந்தால் அவனை காப்பாற்ற தீயணைப்பு துறையினர் கீழே பாதுகாப்பு வலையை விரித்தனர். கட்டடத்தில் வசிப்பவர்களும் பத்திரமாக இறங்கும்படி கேட்டனர்.
அதோடு இறங்கி வந்தால் அடிக்கமாட்டோம் என்றும், சாப்பாடு கொடுப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் திருடன் பயத்தில் இருந்தான். அவர்களிடம் சிக்கினால் தர்ம அடி கொடுப்பார்கள் என்று நினைத்து அப்படியே இருந்தான். இந்த சம்பவம் காலை 7 மணி வரை நீடித்தது. இறுதியில் திருடன் அவன் இருந்த கட்டடத்திற்கு பக்கத்து கட்டடத்தின் காம்பவுண்டிற்குள் குதித்தான். இதில் படுகாயம் அடைந்த அத்திருடன் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனான். அவனது பெயர் ரோஹித் என்றும் 26 வயது என்றும் தெரிய வந்துள்ளது. அவன் இந்தி மற்றும் பெங்காலி மட்டும் பேசினான். அவனது உறவினர்கள் வரும் வரை உடலை பாதுகாத்து வைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/nTXV5QU
0 Comments