4 மாதக் குழந்தையை 3-வது மாடியிலிருந்து வீசிக் கொன்ற குரங்கு! - உபி-யில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம், துங்கா பகுதியில் வசித்துவரும் நபர் ஒருவர் தனது வீட்டின் மூன்றாவது மாடியில் தன்னுடைய 4 மாத ஆண் குழந்தையைக் கையில் வைத்தபடி நின்றுக்கொண்டிருந்திருக்கிறார். அந்தப் பகுதியில் பொதுவாகவே குரங்குகள் நடமாட்டம் அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கையில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்த அந்த நபரைப் பார்த்த குரங்குகள், கூட்டமாக அவரை நோக்கி வந்திருக்கின்றன.

பின்னர் அவரைப் பார்த்து சத்தமிட்டிருக்கின்றன. அதைக் கண்டு அச்சமடைந்த அந்த நபர், கத்திக் கூச்சலிட்டிருக்கிறார். அவர் குரல் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் மாடிக்கு வந்திருக்கின்றனர். ஆனால், அதற்குள்ளாக அந்த நபரை தாக்கி அவரிடமிருந்த குழந்தையைப் பறித்த குரங்கு ஒன்று, அதை மூன்றாவது மாடியிலிருந்து கீழே போட்டிருக்கிறது.

குரங்கு- கோப்பு படம்

அதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. குரங்குகளின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்ப உறுப்பினர்கள் அவற்றை விரட்ட முற்பட்டிருக்கின்றனர். ஆனால், குரங்குகள் அவர்களை தாக்கியிருக்கின்றன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பரேலி தலைமை வனப் பாதுகாவலர் லலித் வர்மா, இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/2dJA8KQ

Post a Comment

0 Comments