ஒரே மரத்தில் 300 வகை மாம்பழம்! இந்தியாவின் மாம்பழ தந்தையின் கண்டுபிடிப்பு!

ஒரு மாங்காய் மரத்தை கண்டாலே, அம்மரத்தின் மாம்பழங்களை புசிக்க வேண்டும் எனத் தோன்றும். ஆனால் ஒரே மாமரத்தில் 300 வகையான மாம்பழங்கள் இருந்தால் எப்படி இருக்கும்.

300 வகையான மாம்பழம் ஒரே மரத்தில் எப்படி வளரும் என வினவுகிறீர்களா, இதை சாத்தியப்படுத்தி காட்டி இருக்கிறார், இந்தியாவின் மாம்பழ தந்தை என அழைக்கப்படும் கலீம் உல்லாஹ் கான்.

உத்திரபிரதேசம் மாலிகாபாத்தில் பழத்தோட்டம் வைத்திருக்கும் 82 வயதான கலீம் உல்லாஹ் கான் கடந்த ஐந்து வருடங்களில் சுமார் 300 வகையான மாம்பழங்களை காய்க்க வைத்துள்ளார்..

தோட்டக்கலையில் ஒட்டு கட்டும் முறை மிகவும் பிரபலம். அதாவது வளரும் தாவரத்தின் கிளையில் லேசாக அறுத்து வேறொரு தாவரத்தின் கிளையின் ஒரு பகுதியை இணைத்து கட்டிவிடுவார்கள். அந்த கிளை கெட்டியாக தாவரத்திலோ, மரத்திலோ பிடித்துக் கொண்ட பின் அதன் கட்டை அவிழ்த்து விடுவர். இப்படி செய்வதால் ஒரே மரத்தில் இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட வகை தாவரங்களை கூட வளர்த்து பயன் பெறலாம்.

தன்னுடைய பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, இளம் வயதிலேயே ஒட்டு கட்டும் முறையை (grafting) சோதனை செய்து உள்ளார். புதிய மாம்பழ வகைகளை கண்டுபிடிப்பதில் தன்னுடைய ஆர்வத்தை காட்டி உள்ளார். அதன் தொடர்ச்சியாக ஏழு வகையான கனிகளை ஒரே மரத்தில் பராமரித்து வளர்த்துள்ளார். ஆனால் புயலின் போது அம்மரம் அடித்து சென்றது.

அதனை தொடர்ந்து 1986 -ம் ஆண்டிலிருந்து 300 வகையான மாம்பழ வகைகளை ஒரே மரத்தில் ஒட்டி கட்டும் முறையை பயன்படுத்தி வளர்த்துள்ளார். அதோடு இம்மரத்தில் விளைவிக்கப்படும் மாம்பழ வகைகளுக்கு ஐஸ்வர்யா, சச்சின் டெண்டுல்கர் என பிரபலங்களின் பெயரை வைத்துள்ளார். இந்த மரத்திற்கு தற்போது 120 வயது.. ஒரு மாம்பழமே ஒரு கிலோவிற்கும் அதிகமான எடை இருக்கும்.

இதுகுறித்து கலீம் உல்லாஹ் கான் தெரிவிக்கையில், “வெறும் கண்களால் நீங்கள் பார்த்தால் இது வெறும் மரம். ஆனால் உள்ளதால் இதை பார்த்தால் இது ஒரு பழத்தோட்டம். உலகின் மிகப்பெரிய மாம்பழக் கல்லூரி.

மக்கள் வந்து போவார்கள்; ஆனால் மாம்பழங்கள் நிலையாக இருக்கும். பல வருடங்கள் கழித்து சச்சின் மாம்பழத்தை மக்கள் உண்ணும் போது கிரிக்கெட் ஹீரோவை நினைவு கொள்ளுவார்கள். இரண்டு கைரேகைகள் ஒன்று போல் இருப்பது இல்லை, அதுபோல தான் மாம்பழங்களும்.. மனிதர்களை போன்ற குணங்களை கொண்ட மாம்பழங்களை இயற்கை நமக்கு பரிசாக கொடுத்துள்ளது” என கூறியுள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/NpCRYWx

Post a Comment

0 Comments