தாமதமாக கிடைத்த நீதி: 26 ஆண்டு விசாரணைக்கு பிறகு 70 வயது முதியரை அப்பாவி என விடுவித்த நீதிமன்றம்!

நீதி சில நேரங்களில் மிகவும் தாமதமாக கிடைக்கும். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு 26 ஆண்டுகள் கழித்து கிடைத்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள முஜாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் ரதன். விவசாய கூலி வேலை செய்து தனது குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி ரதனுக்கு 44 வயதாக இருந்த போது காலையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவரை போலீஸார் பிடித்து சென்றனர். ரதன் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக தங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். ரதன் தன்னிடம் எந்த விதமான துப்பாக்கியும் இல்லை என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதிகாரிகள் கேட்காமல் உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ரதனிடம் ஆயுதம் பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் ஆயுதத்தை கடைசி வரை காட்டவே இல்லை. உள்ளூர் அரசியல் பிரச்சையில் ரதன் கைது செய்யப்பட்டு இருந்தார் எனக் கூறப்பட்டது.

தீர்ப்பு

இரண்டு மாதத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரதன், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த 26 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணைக்கு வரும் போது ரதன் நீதிமன்றத்துக்கு வருவார். சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை நீதிமன்றத்துக்கே செலவிட்டார். 26 ஆண்டுகள் நடந்த சட்டப்போராட்டம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

ரதன் அப்பாவி என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ரதன் கூறுகையில், ``போலி வழக்கால் எனது வாழ்க்கையே சீரழிந்துவிட்டது. எனது பிள்ளைகளை முழுமையாக படிக்க வைக்க முடியவில்லை. நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராவதில் எனது பாதி வாழ்க்கை வீணாகிவிட்டது. நான் அப்பாவி என்பதை நிரூபிப்பதற்காக ஏரத்தாள 30 ஆண்டுகள் போராடி இருக்கிறேன். இறுதியாக உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் இதற்கு நான் அதிக விலை கொடுக்கவேண்டியிருந்தது. இப்போது 70 வயதாகிறது” எனத் ரதன் தெரிவித்தார். 26 ஆண்டுகளில் 400 நாள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ரதன் கடந்த 2020-ம் ஆண்டே இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அரசு வழக்கறிஞர் இந்த வழக்கையும் மேல் முறையீடு செய்தார். அதில் இப்போதுதான் தீர்ப்பு கிடைத்திருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/VvDLZBE

Post a Comment

0 Comments