`போதுமான அளவுக்கு பெட்ரோல் இல்லை; ஃபைன் ரூ.250!' - வாகன ஓட்டியை அதிரவைத்த போலீஸ்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் விதிக்கப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது. இப்போதெல்லாம் அபராதத்தை பணமாக கேட்பதில்லை. E-Challan அனுப்பி கோர்ட்டில் கட்டுங்கள் என்று கூறிவிடுகின்றனர். இந்த நிலையில், கேரளாவில் ஒருவர் போதிய எரிபொருள் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக டிராஃபிக் போலீஸார் அபராதம் விதித்திருக்கும் சம்பவம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

போதுமான அளவுக்கு பெட்ரோல் இல்லை; ஃபைன் ரூ.250

கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள புக்காட்டுப்பட்டி என்ற இடத்தைச் சேர்ந்த பாசில் ஷியாம் என்பவர் அவசரமாக தனது ராயல் என்ஃபீல்டு பைக்கில் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் அவரை டிராஃபிக் போலீஸார் மடக்கினர். பாசிலிடம் அனைத்து ஆவணங்களையும் பார்த்தனர். பாசிலிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தன. ஆனாலும் 250 ரூபாய் அபராதம் கட்டும்படி கூறியிருக்கின்றனர். அலுவலகம் செல்லவேண்டிய அவசரத்தில் வாக்குவாதம் செய்துகொண்டிருக்க நேரம் இல்லாததால் 250 ரூபாயை கொடுத்து சலானை வாங்கிச்சென்றார்.

அலுவலகத்தில் சென்று பார்த்த போதுதான் என்ன காரணத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று விவரம் தெரியவந்தது. வண்டியில் போதிய எரிபொருள் இல்லை என்பதால் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாசில், அப்படி ஒரு அபராதம் இருக்கிறதா என்று தன்னுடைய அலுவலக நண்பர்களிடம் விசாரித்தார். ஆனால் யாருக்கும் அது போன்ற அபராதம் இருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்தனர். இதனால் தன்னிடமிருந்த அபராத ரசீதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

போலீஸ்

அதனைப் பார்த்து நெட்டிசன்கள் கேரளா டிராஃபிக் போலீஸாரை டேக் செய்து அதிருப்தி தெரிவித்தனர். மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் சமூக வலைதளத்தில் அபராத ரசீதைப் பார்த்துவிட்டு பாசிலுக்கு போன்செய்து பேசினர். எரிபொருள் போதிய அளவு இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கும் விதிகள் மோட்டார் வாகன சட்டத்தில் இருப்பதாகவும், அந்த விதிகள் பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இரு சக்கர வாகனங்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவித்தனர். டிராஃபிக் போலீஸார் தவறுதலாக அந்த விதியைப் பயன்படுத்தி அபராதம் விதித்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர். உண்மையில் பாசில் ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் வண்டியை ஓட்டி வந்தார். அதற்குத்தான் அபராதம் விதித்திருக்கவேண்டும். அதே சமயம் தனது வாகனத்தில் எரிபொருள் முழுமையாக இருந்தது என்று பாசில் தெரிவித்திருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/vBf48pz

Post a Comment

0 Comments