கேரள மாநிலத்தில் ஆளும் சி.பி.எம்-க்கு எதிராகவும், முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றன. திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகம் மூலம் தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ், கடத்தலில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்தே இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் சென்ற பினராயி விஜயனை நோக்கி இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் விமானத்துக்குள்ளேயே கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து கேரளாவில் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஆளும் கட்சியான சி.பி.எம் மற்றும் துணை அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. சி.பி.எம் கட்சியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எஃப்.ஐ) சார்பிலும் மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காட்டில் டி.ஒய்.எஃப்.ஐ சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில், சி.பி.எம் மாவட்ட கமிட்டி உறுப்பினரும், டி.ஒய்.எஃப்.ஐ மாவட்ட செயலாளருமான கே.சி.ரியாசுத்தீன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கே.சி.ரியாசுத்தீன் பேசுகையில், "மன்னார்காட்டிலுள்ள இளைஞர் காங்கிரஸ்காரர்களுடன் நட்புடன் பழகி வரக்கூடியவர்கள் நாங்கள். அவர்கள் என்றும் நல்ல ஆரோக்கியத்தோடு அரசியல் நடத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். உங்களைப் பார்க்கும் போது நாங்கள் கை காட்டி, சிரித்து வாழ்த்த கூடியவர்கள். ஆனால் எங்களுக்கு மற்றொரு முகம் இருக்கிறது. அதை இளைஞர் காங்கிரஸாரும், அவர்களை தெருவில் இறக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
சகாவு பினராயி விஜயன் கேரளத்தின் முதலமைச்சர் என்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து வருகிறது. அது அபீஷியலாக தீர்மானிக்கப்பட்டது. அவர் முதலமைச்சர் மட்டுமல்ல எங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பிற்குரிய பொலிட்பீரோ உறுப்பினர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஒரு கட்டத்தில் நாங்கள் போலீஸிடம் ஒதுங்கி ஓரமாக நிற்கும்படி கூறுவோம். கேரளத்தின் கேரள மக்கள் கொண்டாடும் முதலமைச்சர் சகாவு பிரனராயி விஜயனுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது டி.ஒய்.எஃப்.ஐ-க்கு தெரியும்.
கேரளத்தில் ஒன்றரை கோடி உயிருள்ள இளைஞர்கள் முதலமைச்சரின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றெடுத்தால், அதன்பிறகு இளைஞர் காங்கிரஸ், யூத் லீக் ஆகியோர் கவனமாக இருக்க வேண்டும். அந்த பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். கேரளத்தில் உள்ள ஒன்றேகால் லட்சம் போலீஸ், நாட்டின் கோடிக்கணக்கான ராணுவமும் உங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாலும் நீங்கள் வீட்டில் கிடந்து உறங்க கேரள மண்ணில் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
நாங்கள் அமைதியாக போராட்டம் நடத்துகிறோம். எல்லை தாண்டினால் டி.ஒய்.எஃப்.ஐ பற்றி உங்களுக்கு தெரியும் அல்லவா. நாங்கள் உங்கள் வீட்டுக்குள் புகுந்துவிடுவோம். நீங்கள் உங்கள் அம்மா, அப்பா, குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டு, சுகமாக உண்டு உறங்கும் வாழ்க்கைக்கு டி.ஒய்.எஃப்.ஐ-காரர்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். அந்த நிலையை ஏற்படுத்தாதீர்கள். எங்கள் கேப்டன் பினராயி விஜயனை இனி ஒரு வார்த்தையாலோ, பார்வையாலோ வேதனைப்படுத்த முயன்றால் அது கேரளாவில் காங்கிரஸின், யூத் லீக்கின் இறுதி யாத்திரையாக இருக்கும்" என்றார்.
டி.ஒய்.எஃப்.ஐ மாவட்டச் செயலாளரின் மிரட்டல் தொனியிலான பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/C8A6UcF
0 Comments