மூன்று மணிநேரக் காத்திருப்பு; குவிந்த மக்கள்; ஸ்தம்பித்த பெங்களூர் மெட்ரோ; எதனால் இந்தக் கூட்டம்?!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள நாகசந்த்ரா (Nagasandra) மெட்ரோ நிலையம் சனிக்கிழமை மக்கள் திரளால் ஸ்தம்பித்துப் போனது. 'இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு?' என விசாரித்து பார்க்கையில்தான் தெரிய வந்தது மொத்தக் கூட்டமும் பர்னிச்சர் வாங்க வந்த கூட்டம் என்று. பிரபல பர்னிச்சர் கம்பெனியான IKEA, தனது புதிய கிளை ஒன்றை நாகசாண்ட்ரா பகுதியில் திறந்ததே மக்கள் படையெடுக்கக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

ஸ்வீடனை மையமாகக் கொண்ட வீட்டு உபயோக பொருள்களுக்கான பிரத்யேக ஷோரூம் நிறுவனமான இதன் பெங்களூரு கிளையை ஜூன் 22-ம் தேதி கர்நாடகாவின் முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். டெல்லி, நவி மும்பைக்கு அடுத்து இந்தியாவில் அமைந்த மூன்றாவது கிளை இது.

சராசரியாக நாகசந்த்ரா மெட்ரோ நிலையத்துக்கு 13,000 பயணிகள் (பச்சை வழித்தடத்தில்), 16,000 ஏறும் இறங்கும் பயணிகள் (ஊதா வழித்தடத்திலிருந்து பச்சை வழித்தடத்திற்கு மாறுபவர்கள்) என்ற எண்ணிக்கையிலேயே மக்கள் பயணிப்பர். இந்த எண்ணிக்கை முறையே 23,878 பயணிகளாகவும், 30,067 பயணிகளாகவும் ஜூன் 25 அன்று உயர்ந்தது.

பெங்களூர் மெட்ரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அன்ஜூம் பர்வேஸ் (Anjum Parwez), "வார இறுதி என்பதால் ட்ரெயின் வந்து செல்வதற்கு இடையிலான நேரம் 8 நிமிடங்களாக இருந்தது. மெஜஸ்டிக் நிலையத்துக்கும் நாகசந்த்ராவுக்கும் இடையில் தேவையைப் பொறுத்து ட்ரெயின் சேவையை மாற்றியமைப்போம். இந்தக் கூட்டம் என்பது ஆரம்பக் கால உற்சாகத்தால் ஏற்பட்டதா அல்லது எப்போதைக்கும் தொடரக்கூடியதா என்பதைப் பார்த்த பிறகே முடிவு எடுக்க முடியும்" என்று தெரிவித்தார்.

IKEA பெங்களூர்

அலைமோதிய கூட்டத்தால் IKEA நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெங்களூர், உங்களது வரவேற்பால் நாங்கள் அகமகிழ்ந்தோம். தற்போதைய காத்திருப்பு நேரம் 3 மணிநேரம். அதற்கேற்ப திட்டமிடுங்கள் அல்லது ஆன்லைனில் வாங்குங்கள்" எனப் பதிவிட்டனர். பலர் கடைக்குள் நுழைய முடியாமல் திரும்பினர்.

நெட்டிசன்கள் இந்தச் சூழலை மீம் மெட்டிரியலாக மாற்றிப் பகிரத் தொடங்கினர். `திருப்பதிக்குப் போட்டியாக IKEA-வும் உருவாகிறது' என்பது போன்ற கமென்ட்டுகளையும் சமூக வலைதளத்தில் காண முடிந்தது.



from தேசிய செய்திகள் https://ift.tt/GJSpilq

Post a Comment

0 Comments