வேலூர் மாவட்ட தி.மு.க சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்.பி ஆ.ராசா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ``ஏதோ கூடினோம். களைந்தோம் என்று இருக்கக் கூடாது. கூடினோம் கொள்கையை தெரிந்து கொண்டோம் என்று இருக்க வேண்டும். அந்த கொள்கையை வளர்ப்பதற்காகத்தான் இந்த மாநாடு. ‘திராவிட மாடல் என்றால் என்ன?’ என்று ரொம்பப் பேர் கேட்கிறார்கள். சுயமரியாதை, ஆண்டான் அடிமைக்கூடாது, சமதர்ம கொள்கை, சாதியில்லாதது, எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம், பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு என்று தி.மு.க-வின் கொள்கைகளை வரிசையாக அடுக்கிக் கொண்டுப் போனால், அதுதான் திராவிட மாடல்.
திராவிட மாடலை தெரிந்து கொள்ள முரசொலியைப் படியுங்கள். கொள்கை வெறி இருந்தால்தான் மேலே வர முடியும். நாளைக்கே பி.ஜே.பி அரசாங்கம் காவி உடையைப் போட்டுவிட்டு மொட்டை அடித்து விடும். ஆகையால், தமிழ்நாட்டின் வரலாறு, தமிழ் மொழியின் பெருமை, தமிழின் நாகரிகம் ஆகியவை நிலைத்து நிற்க வேண்டுமெனில் அனைவரும் தி.மு.க-வில் இணையுங்கள். வீரனாக திகழுங்கள்’’ என்றார்.
தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், ``காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தடையாக இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். தடையாக இருப்பது தமிழ்நாடு அல்ல, கர்நாடக அரசுதான். முதலில், ‘ஒப்பந்தம் முடிந்துவிட்டது‘ என தடைப்போட்டதும் அந்த அரசுதான். பின்னர் தீர்ப்பாயம் வேண்டும் என்று கேட்டபோது, அதை தடுத்ததும் கர்நாடக அரசாங்கம்தான். தீர்ப்பாயம் வந்தபிறகு அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்ததும் அவர்கள்தான். காவிரி நீர் மேலாண்மைக் குழுவுக்குத் தலைவரை நியமிக்கவிடாமல் தடுத்ததும் கர்நாடக மாநில அரசுதான்.
காவிரி வரலாற்றில் ஒவ்வொரு அங்குலமாக எதிர்த்தது கர்நாடக அரசுதான். பசவராஜ் பொம்மை தமிழ்நாட்டை குற்றம் சொல்வது பெருமை அல்ல. அவரின் கருத்து சரியல்ல. காவிரி வரலாறு குறித்து கர்நாடக முதல்வருக்குத் தெரியவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை மத்திய அரசு ஏற்காது என்கிறார் அவர். மத்தியிலும் பி.ஜே.பி அரசு. கர்நாடகாவிலும் பி.ஜே.பி அரசு. நாங்கள் சொல்வதைத் தான் மத்திய அரசு கேட்கும் என மறைமுகமாக கர்நாடக முதலமைச்சர் கூறுகிறார்.
‘15 கூட்டங்கள் நடந்தன. அதில், தமிழக அரசு பங்கேற்கவில்லை‘ எனவும் கர்நாடக முதலமைச்சர் கூறியிருக்கிறார். 9 கூட்டங்களில் நாங்கள் கலந்துகொண்டோம். சிலக் கூட்டங்களை அவர்களே ரத்து செய்திருக்கிறார்கள். நாங்கள் கலந்துகொள்ளவில்லை எனச் சொல்வது அப்பட்டமானப் பொய். கர்நாடக முதலமைச்சர் தவறான செய்தியை தருகிறார். நான் இதற்கு வருத்தப்படுகிறேன். ஒரு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுவது சட்ட விரோதமா? மேக்கேதாட்டூ அணை கட்டக் கூடாது எனச் சொல்வது சட்ட விரோதமா?
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புப் பற்றி கர்நாடக முதலமைச்சருக்குத் தெரியவில்லை. எங்களுடைய தலைவர் கடிதத்தை ‘ஸ்டண்ட்‘ என்று சொல்கிறார். அவர்தான் தேர்தலுக்காக ‘ஸ்டண்ட்‘ அடிக்கிறார் என்று சொல்ல எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. என் தலைவரை டச் பண்ணிட்டார். தி.மு.க, ஜல்லிக்கட்டு மாடு சும்மா விடாது’’ என்றார்.
தொடர்ந்து, சனாதனம் பேசும் ஆளுநர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ``இந்த மண்ணினுடைய பெருமைத் தெரியாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார். சனாதனத்துக்கு சாவு மணி அடித்த மண், இந்த மண். மீண்டும் அதை உயிர்ப்பிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது’’ என்றார் காட்டமாக!
from தேசிய செய்திகள் https://ift.tt/YiFTDx9
0 Comments