``அண்ணனுக்கு எதிராக அல்ல... அரசின் கொள்கைக்கு எதிராகவே போராடுகிறேன்!" - பிரதமர் மோடியின் தம்பி தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரஹலாத் மோடி அகமதாபாத்தில் ரேஷன் கடை நடத்தி வருகிறார். பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து நரேந்திர மோடியும், பிரஹலாத் மோடியும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசிக்கொண்டதில்லை எனக் கூறப்படுகிறது. பிரஹலாத் மோடி தன் தாயாரைச் சந்தித்த போதுகூட உறவினர்கள் யாரும் அருகில் இல்லை.

இந்த நிலையில், பிரஹலாத் மோடி ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கம் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார். வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி டெல்லியில் நடக்கவிருக்கும் இந்தப் போராட்டத்தில் பிரஹலாத் மோடி, தான் பங்கேற்கப்போவதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அகில இந்திய ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவரான பிரஹலாத் மோடி `தி பிரிண்ட்' செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், ``ஜூலை மாதத்துக்குள் மத்திய அரசு ரேஷன் கடை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில், டெல்லியில் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி நடக்கவிருக்கும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன்.

பிரஹலாத் மோடி

ராம்லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்றம் வரை பேரணி நடத்தப்படும். ரேஷன் கடை உரிமையாளர்களுக்கு கமிஷனை அதிகரித்துக் கொடுக்கவேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஒரு கிலோ ரேஷன் உணவுப் பொருளுக்கு 0.90 பைசா கமிஷன் கொடுக்கிறார்கள். இதனை 4 ரூபாயாக அதிகரிக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். நாடு முழுவதும் ரேஷன் கடைகளுக்கு ஒரே மாதிரியான கமிஷன் கொடுக்கவேண்டும் என்று கோரியிருக்கிறோம். மத்திய அரசு இதில் கமிஷனை முடிவு செய்யவேண்டும்.

பிரதமர் மோடி

நானும் அகமதாபாத்தில் ரேஷன் கடை வைத்திருக்கிறேன். நான் என் சகோதரருக்கு (மோடி) எதிராகப் போராடவில்லை. அரசின் கொள்கைக்கு எதிராகத்தான் போராடுகிறேன். நான் ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து செயல்படுகிறேன். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்" என்று தெரிவித்தார். கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் காளி சரன் குப்தாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/AWHqCf6

Post a Comment

0 Comments