பாலியல் வீடியோ கசிந்த விவகாரம்: விசாரணை கேட்டு நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு!

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான வழக்கில் நடிகர் திலீபிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீதிமன்ற கஸ்டடியில் இருந்த மெமரி கார்டில் இருந்து பாலியல் வீடியோ வெளியே கசிந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். வீடியோ கசிந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இதற்கு முன்பு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு நடிகை கடிதம் எழுதி பரபரப்பை கிளப்பினார். 2018- ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி பிரின்ஸ்பல் செசன்ஸ் கோர்ட்டின் வசம் இருந்த மெமரி கார்டின் ஹாஸ் வேல்யூ(hash value) மாறியதாக ஏற்கனவே நடந்த விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து நீதிமன்ற ஊழியர்களிடம் விசாரணை நடத்த க்ரைம் பிரான்ச் அனுமதி கேட்டபோது, நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்தது. இந்த நிலையில் வீடியோ வெளியானது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

நடிகர் திலீப்

நடிகை உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில், ``நீதிமன்ற கஸ்டடியில் உள்ள மெமரி கார்டில் இருந்த காட்சிகள் வெளியான சம்பவத்தில் விசாரணை நடத்த வேண்டும். அந்த மெமரி கார்டில் இருந்தது எனக்கு எதிராக நடந்த கொடுமைகள் அடங்கிய காட்சிகள். அதை வெளியே விட்டது யார் என்பது தெரியவேண்டும். நீதிமன்றத்தில் உள்ள மெமரி கார்டில் இருப்பது எனது வீடியோ. அது வெளியே கசிந்தால் எனது எதிர்காலத்தை பாதிக்கும். நீதிமன்ற கஸ்டடியில் இருந்த வீடியோவை யாரோ பரிசோதித்திருக்கிறார்கள். அதுபற்றி விசாரிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் இருந்த மெமரி கார்டில் இருந்து வீடியோ வெளியான விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞரும் ஏற்கனவே கோரிக்கை முன்வைத்திருந்தார். நடிகை பாலியல் வழக்கு விசாரணையை நீட்டிப்பதற்காக இதுபோன்று மனு அளிக்கப்படுகிறதா என நீதிமன்றம்m கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், நடிகை பாலியல் வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க வரும் ஜூலை 15-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. அதே சமயம் வீடியோ நீதிமன்றத்தில் இருந்து வெளியானதா, இல்லையா என ஆய்வு செய்ய இரண்டு அல்லது மூன்று நாள்கள் போதும் என அரசு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/K6qSWpR

Post a Comment

0 Comments