``கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்!" - பினராயி விஜயன் திட்டவட்டம்

கேரள முதல்வர் பினராயி விஜயன், குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சி.ஏ.ஏ) கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். `கொரோனா தொற்று முடிவுக்கு வரும் காலகட்டத்தில், சி.ஏ.ஏ-வை நிச்சயம் அமல்படுத்துவோம்!' என கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்த நிலையில், பினராயி விஜயன் இத்தகைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

பினராயி விஜயன் தலைமையிலான அரசு, கேரளாவில் ஆட்சிக்குவந்து ஒரு வருடம் நிறைவடைந்ததையொட்டி, சிறப்பு விழா ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பினராயி விஜயன், ``குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கேரள அரசு தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. அதை அமல்படுத்த மாட்டோம். இதுவே தொடரும். நம் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் மதச்சார்பின்மை கொள்கையின்படியே நம் நாடு செயல்படுகிறது. ஆனால், தற்போது அத்தகைய மதச்சார்பின்மை கொள்கையை அழிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளால் குறிப்பிட்ட பிரிவினர் பெரிதும் கவலையடைகின்றனர்.

பினராயி விஜயன்

நாட்டின் பல்வேறு பகுதிகளில், மக்களிடையே வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்த பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், சமூகத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் காண ஒரு கணக்கெடுப்பு முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இந்த கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், மதத்தின் அடிப்படையில் குடியுரிமை தீர்மானிக்கப்படாது என்ற உறுதியான நிலைப்பாட்டை மாநில அரசு எடுத்திருக்கிறது" எனக் கூறினார்.

2019, டிசம்பர் 11-ம் தேதியன்று இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில், பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து வந்த இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், பார்சி மதத்தினர் இந்தியாவில் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/YwXFndg

Post a Comment

0 Comments