ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்திருந்த பேட்டியில், அவரிடம் நாட்டில் அதிகரிக்கும் மதக் கலவரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசியவர், ``எனது கல்லூரி காலத்தில், ஒவ்வொர் ஆண்டும் ஏதாவது ஒரு பெரிய மதக் கலவரம் ஏற்படும். ஆனால், கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் அதுபோன்ற எதையும் கேள்விப்படவில்லை. கடந்த 25 ஆண்டுகளில் மத மோதல்கள் படிப்படியாகக் குறைந்திருக்கின்றன. இருந்தபோதிலும், ஒருசில நிகழ்வுகள் நடந்திருப்பது துரதிஷ்டவசமானது.
சில விவகாரங்கள் பல விதங்களாக மாறியிருக்கிறது. சிலவற்றை நாம் கூடுதலாகப் பெரிதுபடுத்துகிறோம் என்று நினைக்கிறேன். நாட்டில் எந்த கிராமங்களில் நீங்கள் நடந்து சென்றாலும் அதுபோன்ற வன்முறை எதுவும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். தொலைக்காட்சி விவாதங்களில் இந்த விவகாரங்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன" என்று பேசியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் கலவரம் உச்சநிலையிலிருந்தது. இந்த சமயத்தில் இவர் இப்படிப் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உண்மை நிலவரம் என்ன?
கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்றது முதல் மிகப்பெரிய அளவில் ஒரு மதக் கலவரம்கூட இந்தியாவில் நடைபெறவில்லை என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்திருக்கிறார். ஆனால், முன்பைவிட பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு, நாடு முழுவதும்... குறிப்பாக பா.ஜ.க ஆட்சி நடைபெறும் இடங்களில் வகுப்புவாத, இனவாத, வன்முறைகள் மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த முதல் 11 வாரங்களிலேயே நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட மதக் கலவரங்கள் நடைபெற்றுள்ளதாகச் சோனியா காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.
2014-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 644 மதக் கலவரங்கள் நடைபெற்றன. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் - 133, மகாராஷ்டிரம் - 97, குஜராத் - 74, கர்நாடகம் - 73, ராஜஸ்தான் - 72, பீகார் - 61 மதக் கலவரங்கள் நடைபெற்றுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2015-ம் ஆண்டில் 650 மதக் கலவரங்கள் நடைபெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில், உத்தரப் பிரதேசம் - 139, மகாராஷ்டிரம் - 97, மத்தியப் பிரதேசம் - 86, கர்நாடகம் - 79, பீகார் - 59 என்ற எண்ணிக்கையில் கலவரங்கள் நிகழ்ந்துள்ளன என்று நாடாளுமன்ற புள்ளிவிவரங்கள் கூறுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் மாவட்டம் காரொளியில் இந்துக்கள் புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் நடத்தினர். அப்போது, முஸ்லிம்கள் அதிகம் இருந்த பகுதிக்கு அந்த ஊர்வலம் சென்றது. அங்கு இரண்டு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டதில் இருவரும் தாக்கிக்கொண்டனர். இதில் அந்த பகுதியிலிருந்த பல்வேறு கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. 35-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறியது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கடைகள், வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கலவரக்காரர்கள் தாக்கியதில் காவலர்கள் பலர் படுகாயமடைந்தனர்.
2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி அன்று ஜார்கண்டை சேர்ந்த தப்ரேஜ் அன்ஸாரி என்ற இஸ்லாமிய இளைஞரைப் பிடித்துவைத்து ஒரு கும்பல் திருடியதாக அவரை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கிறது. பிறகு அவரை ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ஹனுமான் சொல்லச் சொல்லி அடிக்கிறார்கள். காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அவர் உயிரிழக்கின்றார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் 12 பேர் கும்பல் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜார்கண்ட் பொதுமக்கள் உரிமை இயக்கத்தின் அறிக்கை தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த 2021-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் காசியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இஸ்லாமிய முதியவர் அப்துல் சதாம் என்பவரை, ஒரு கும்பல் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு அவரை ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச் சொல்லி அடித்துத் துன்புறுத்தும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், அவரின் தாடியை வெட்டியதோடு, அவரின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
சமீபத்தில், பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு பிரிவினர் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அப்போது இரண்டு பிரிவினருக்கிடையே வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் காவலர்கள் உட்பட 40-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அந்த பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது. கடுமையான போராட்டத்துக்குப் பிறகு காவலர்கள் போராட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இது தவிர்த்து இன்னும் பல்வேறு மதம் சார்ந்த வன்முறைகள் இந்தியா முழுவதும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/Jy5etD3
0 Comments