மும்பை காஷிமிரா- பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் ரியான் ஸ்டீபன் பிராகோ (37) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு பூனம் (30) என்ற மனைவியும், அனய்கா ரியான் பிராகோ (7) என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில், ரியான் ஸ்டீபன் பிராகோ கடன் சுமையால் தவித்ததாகத் தெரிகிறது. அதனால் வசாய் நகரில் இவர்கள் வசித்த வீட்டை அருகிலிருந்த விடுதிக்கு விற்றுள்ளார். ஆனால் ஒப்பந்த குளறுபடியால் பணம் கைக்கு வரவில்லை.
அதைத் தொடர்ந்து குடும்பத்துடன் கடந்த மே 27, காஷிமிராவில் உள்ள விடுதியில் அறை எண் 212-ல் தங்கியுள்ளார். அங்குக் கணவனும், மனைவியும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, அதற்காக எலி மருந்து வாங்கியுள்ளனர். முதலில் குளிர்பானத்தில் எலி மருந்தைக் கலந்து அவர்கள் மகள் அனய்கா ரியான் பிராகோவுக்கு கொடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து மனைவியும் குடித்துள்ளார். தன் மனைவிக்கு விஷம் வேலை செய்யவில்லை என்பதை அறிந்த ரியான் ஸ்டீபன் பிராகோ அறையிலிருந்து வெளியேறி தன் செல்போனை விற்றுவிட்டு இரண்டு கத்திகளை வாங்கிக்கொண்டு அறைக்கு வந்துள்ளார்.
ஆனால், மனைவியைக் கொலைசெய்வதற்குத் தைரியம் இல்லாமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காஷிமிரா காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் சஞ்சய் ஹசாரே, ``அறை பூட்டப்பட்டு இருப்பதாகத் தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்துக்கு காவல்துறை விரைந்தது. அறையில் குற்றவாளியின் மகள் அனய்கா ரியான் இறந்து கிடந்தார். அவர் மனைவி அரைமயக்கத்தில் இருந்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
குற்றவாளி ரியான் ஸ்டீபன் பிராகோ மீரா சாலையில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மற்றொரு விடுதியிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மனைவி சிகிச்சை முடிந்த பின் அவரும் கைது செய்யப்படுவார். தம்பதியினர் மீது IPC பிரிவுகள் 302 (கொலை), 309 (தற்கொலைக்கு முயற்சி) மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
கடன் சுமையால் தற்கொலைக்கு முயன்று மகளைப் பறிகொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/diVFomL
0 Comments