கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் 25 ஆண்டுக்காலம் பணியாற்றிய மூத்த தலைவர் பிரிஜேஷ் கலப்பா திடீரென அந்தக் கட்சியிலிருந்து விலகியிருப்பது, அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர்தான், காங்கிரஸின் மூத்த தலைவரும், ஜி-23 தலைவர்களில் ஒருவருமான கபில் சிபல் கட்சியிலிருந்து விலகி, சமஜ்வாதி ஆதரவுடன் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது, கர்நாடகாவிலும் மூத்த தலைவர் ஒருவர் காங்கிரஸிலிருந்து விலகியிருப்பது அந்தக் கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான பிரிஜேஷ் கலப்பா, 1997-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சுமார் 25 ஆண்டுகள் மாநில காங்கிரஸில் பல்வேறு பதவிகளை வகித்துவந்தவர், தற்போது திடீரென அந்தக் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். இது தொடர்பாக பிரிஜேஷ் கலப்பா கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ``கட்சியின் நலனுக்காகத் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கட்சி வழங்காத காரணத்தினால் விலகுகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், பிரிஜேஷ் கலப்பா ஆம் ஆத்மியில் சேரப்போவதாகத் தனியார் ஊடகம் ஒன்றுக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கர்நாடக மாநில காங்கிரஸின் பொதுச்செயலாளர் கவிதா ரெட்டி, எம்.எல்.சி தேர்தல் வேட்பாளர் தேர்வு பட்டியலில், தன்னுடைய பெயர் இடம்பெறாததையடுத்து, ``இந்தியத் தேசிய காங்கிரஸ் ஏன் 50 சதவிகித மக்களைப் புறக்கணிக்கிறது" எனச் சொந்தக் கட்சியையே சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/XlBGxOv
0 Comments