கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில், வரும் 2022-23-ம் கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கும் பணியை அம்மாநில அரசு செய்துவருகிறது. அப்படி மாற்றப்படும் பாடத்திட்டங்களில் முன்பிருந்த முக்கிய தலைவர்கள் குறித்த தகவலை அரசு நீக்கியிருப்பதாகவும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் குறித்த தகவல் இடம்பெற்றிருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டிவருகிறார்கள்.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர், ஹெட்கேவரின் உரைகள் இடம் பெற்றுள்ளது. இந்த செயலுக்கு கல்வியாளர்களும், எதிர்க்கட்சியினருக்கும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல, பாடத்திட்டங்களிலிருந்து திப்பு சுல்தான் குறித்த குறிப்புக்கள் நீக்கப்பட்டிருப்பதும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சைகள் அடங்குவதற்கு முன்பாகவே இன்னொரு பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது. பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தைச் சமீபத்தில் கர்நாடக பாடநூல் கழகம் தனது இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. இந்த புத்தகத்தின் ஐந்தாம் பாகத்தில் சமூகம் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த பாடங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த பகுதியில் பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
உதாரணமாக, இந்த பகுதியில் ஆர்ய சமாஜம் நிறுவிய தயானந்த் சரஸ்வதி, பிரம்ம சமாஜ் நிறுவிய ராஜாராம் மோகன் ராஜ், சத்யசோதன சமாஜ் நிறுவிய ஜோதிபாய் பூலே, பிரார்த்தன சமாஜ் நிறுவிய ஆத்மாராம் பாண்டுரங், அலிகர் இயக்கத்தை நிறுவிய சர் சயீது அகமது கான், ராமகிருஷ்ண மிஷனை தோற்றுவித்த ராமகிருஷ்ண பரமஹம்சர் குறித்த தகவல்கள் இந்த பகுதியில் இடம் பெற்றுள்ளது. அதேவேளையில், கடந்த முறை இடம்பெற்றிருந்த பெரியார் மற்றும் நாராயண குரு குறித்த தகவல்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் மற்றும் நாராயண குரு குறித்த தகவல்கள் நீக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கான அதிகாரத்துக்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும் போராடிய இருவரின் சித்தாந்தத்தை அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்வதைத் தடுக்கும் விதமாக இந்த செயல் உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.
சமீபத்தில் தான் கர்நாடக மாநிலத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஹிஜாப் அணிவது தொடர்பான சர்ச்சை இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரம் சற்று தணிந்துள்ள நிலையில் தற்போது பாடப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிறுவனரின் பேச்சு இடம் பெற்றிருப்பதும், பெரியார் மற்றும் நாராயண குரு போன்றவர்கள் குறித்த தகவல் நீக்கப்பட்டிருப்பதும் அரசு ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து கர்நாடக பாடநூல் ஆய்வுக் குழு தலைவர் ரோஹித், ``பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் சமூக சீர்திருத்தங்கள் குறித்த பகுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நாராயண குரு குறித்த தகவல்கள் புறக்கணிக்கப்பட்டது உண்மை இல்லை. அவர் குறித்த தகவல்கள் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும், ``நீக்கப்பட்டுள்ளது என்று சிலர் தவறான கருத்துக்களைச் சொல்லிவருகிறார்கள். பொய்யான தகவல்களை நம்பவேண்டாம்" என்று பேசியிருந்தார். அவர் கூறுவது போல, நாராயண குரு குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தாலும், பெரியார் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் குறித்த தகவல்கள் மீண்டும் புத்தகங்களில் இடம் பெறவேண்டும் என்று கோரிக்கை வலுபெற்று வருகிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/PUgib9B
0 Comments