உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் 2017-ல் முதல்வராகப் பதவியேற்றபோதே, மாநிலத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களிலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உட்பட முக்கிய தினங்களில் தேசியக்கொடி ஏற்றுவது, தேசியகீதம் பாடுவது உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், தற்போது யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக வெற்றிபெற்றதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 24 அன்று, மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு முன்பு இனி தேசிய கீதம் பாடப்படவேண்டும் என உத்தரப்பிரதேச அரசின் மதராஸா கல்வி வாரியம் உத்தரவிட்டது. மேலும் இதில் முக்கியமாக மாணவர்களுடன் ஆசிரியர்களும் சேர்ந்து தேசிய கீதம் பாட வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக உருது மொழியில் இஸ்லாமியப் பிரார்த்தனைப் பாடல் பாடப்படுவதுதான் வழக்கமாக இருந்து வந்தது.
இந்த நிலையில், இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, உத்தரப்பிரதேச அரசின் இந்த உத்தரவைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். இதுகுறித்து நேற்று பேசிய ஒவைசி, ``மதராஸாக்களில், நாட்டின்மீது அன்பு செலுத்தவே கற்பிக்கப்படுகிறது. இதில் பா.ஜ.க-வும், யோகி ஆதித்யநாத்தும் தேசபக்திக்கான சான்றிதழை வழங்கத் தேவையில்லை. அதுமட்டுமல்லாமல், மதரஸாக்களை இவர்கள் சந்தேகத்துடன் பார்ப்பதால்தான் இதுபோன்ற சட்டங்களை அவர்கள் கொண்டுவருகின்றனர். நாட்டில் சுதந்திரப்போராட்டம் நடந்தபோது, மதரஸாக்கள்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நின்றனர், சங்க பரிவார் இல்லை" எனக் கூறினார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/dETNbIM
0 Comments