மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிகள், பொதுமக்களுக்கு இடையூராக இருப்பதால் அவற்றை அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விவகாரத்தில் மே 3-ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கியை அகற்ற ராஜ்தாக்கரே கெடு விதித்திருந்தார். ஆனால் அன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை வந்ததால் தனது கெடுவை நான்காம் தேதிக்கு மாற்றினார். அதோடு 3-ம் தேதி கோயில்களில் நடத்த திட்டமிட்டு இருந்த மகா ஆர்த்தி நிகழ்ச்சியையும் ராஜ் தாக்கரே ரத்து செய்தார். ராஜ் தாக்கரே தனது கோரிக்கை தொடர்பாக அவுரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் மாநில அரசுக்கு கெடு விதித்தார். இதில் பேசிய உரை வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக போலீஸார் நேற்று ராஜ் தாக்கரேயிக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். ராஜ் தாக்கரேயும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். ராஜ் தாக்கரே சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில், ``4-ம் தேதியில் இருந்து எந்த மசூதியில் ஒலி பெருக்கியில் அசான் சத்தம் கேட்டாலும் உடனே சத்தமாக அனுமன் பாராயணத்தை பாடுங்கள். அப்போதுதான் ஒலி பெருக்கியால் வரும் பிரச்னையை உணருவார்கள். அசான் சத்தம் உங்களுக்கு இடையூராக இருந்தால் போலீஸில் புகார் செய்யுங்கள். உள்ளூர் மண்டல்கள், பொது அமைப்புகள் ஒலி பெருக்கிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை போலீஸாரிடம் கொடுக்கவேண்டும்” என்று அதில் தெரிவித்துள்ளார். மேலும், ``மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே மசூதிகளில் இருக்கும் அனைத்து ஒலி பெருக்கிகளும் அமைதியாக வேண்டும் என்று சொன்னார். அதனை கேட்டீர்களா? அல்லது மத நம்பிக்கையில்லாத சரத்பவார் சொல்வதை கேட்பீர்களா?” என்று உத்தவ் தாக்கரேயையும் மறைமுகமாக சாடியிருந்தார்.
ராஜ் தாக்கரேயின் கெடுவை தொடர்ந்து முதல்வர் உத்தவ் தாக்கரே மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீலுடன் சட்டம் ஒழுங்கு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். போலீஸாரின் விடுமுறை அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் தாதரில் உள்ள ராஜ்தாக்கரே இல்லத்திற்கு வெளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அவுரங்காபாத்தில் பேசிய பேச்சுக்காக ராஜ் தாக்கரே மீது வழக்கு பதிவு செய்திருப்பதால் இன்று நிலைமை விபரீதமாகும் பட்சத்தில் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இது குறித்து மாநில டிஜிபி ரஜ்னிஷ் சேத் கூறுகையில், ``சட்டம் ஒழுங்கை காப்பாற்ற ஒட்டுமொத்த போலீஸாரும் தயார் நிலையில் இருக்கின்றனர்.
அவுரங்காபாத் போலீஸ் கமிஷனர் மே ஒன்றாம் தேதி ராஜ் தாக்கரே பேசிய உரையை ஆய்வு செய்து வருகிறார். அவர் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.
மேலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க யாரது அனுமதிக்காகவும் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று உத்தவ் தாக்கரே போலீஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக மாநில டிஜிபியுடன் தொலை பேசியிலும் உத்தவ் தாக்கரே பேசினார். இச்சம்பங்களால் மும்பையில் பதட்டமான சூழ்நிலை இருந்து வருகிறது. சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பாதுகாப்பு பணியில் அதிகப்படியான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் ராஜ் தாக்கரே கட்சி அலுவலகத்தில் இருந்த ஒலி பெருக்கியை போலீஸார் அப்புறப்படுத்தினர். அதேசமயம் புதிதாக மசூதிகளில் 803 ஒலி பெருக்கிகள் வைத்துக்கொள்ள போலீஸார் அனுமதி கொடுத்துள்ளனர். இது தொடர்பாக வந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து இந்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/9teNcWs
0 Comments