மும்பை குர்லாவில் கடந்த வாரம் யாசின் மொகமத் என்பவரது வீட்டில் மர்மநபர் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி ஆபரணங்களை திருடிச்சென்றான். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது திருடிய நபர் தலையில் தொப்பி அணிந்துகொண்டு முகக்கவசம் அணிந்திருந்தார். இதனால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதையடுத்து, போலீஸார் தொடர்ச்சியாக 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஒரு இடத்தில் திருடன் தனது முகக்கவசத்தை கழற்றினான். அவன் யார் என்று ஆய்வுசெய்ததில் இதற்கு முன்னர் டிக்டாக் செயலியில் பிரபலமாக இருந்த அபிமன்யு குப்தா என்று தெரியவந்தது. தற்போதும் அபிமன்யு சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார்.
சிசிடிவி காட்சிகளைவைத்து அவரைக் கைதுசெய்ய போலீஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போது, அபிமன்யு குர்லா வரவிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே அவரை மடக்க திட்டம் தீட்டினர். அபிமன்யு குர்லா வந்தபோது அவரைக் கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் திருடியதை ஒப்புக்கொண்டார். மும்பையில் மட்டும் 15-க்கும் அதிகமான வீடுகளில் திருடியிருப்பதாகத் தெரிவித்தார்.
அவர் வீட்டை சோதனை செய்தபோது நான்கு சாக்கு மூட்டைகள் நிறைய காலணிகளும், ஷூக்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அபிமன்யு வீடுகளுக்கு வெளியில் கிடக்கும் செருப்பு, ஷூக்களைக்கூட திருடிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
தற்போது இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் அபிமன்யு திருடிய பணத்தில் சூதாடுவது, ஆடம்பரமாக செலவிடுவது, விலையுயர்ந்த ஆடைகள் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார். அவரிடமிருந்து 14 மொபைல் போன்கள், வெளிநாட்டு கரன்சி, போலி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
from தேசிய செய்திகள் https://ift.tt/fyCsDMp
0 Comments