மகாராஷ்டிரா தினத்தையொட்டி மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே மகாராஷ்டிராவிற்காக பாடுபட்டு உயிர்தியாகம் செய்த தியாகிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அவர் மனைவி ரேஷ்மிதாக்கரே மற்றும் மகன் ஆதித்யதாக்கரே ஆகியோரும் சென்றிருந்தனர். ஏற்கெனவே மகாராஷ்டிரா தினத்தையொட்டி சனிக்கிழமை ஆற்றிய உரையில் மகாராஷ்டிராவில் இந்துக்களை பிரிக்க பா.ஜ.க முயற்சிப்பதாக உத்தவ்தாக்கரே குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக மராத்தி இந்துக்கள், மராத்தியர் அல்லாத இந்துக்கள் எனப் பிரிக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது சிவசேனா தனது நாளேட்டில் மகாராஷ்டிராவிலிருந்து மும்பையைப் பிரிக்க பா.ஜ.க-வும், தேவேந்திர பட்நவிசும் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக அந்தக் கட்சி தனது கட்சி நாளேட்டில்,
``பா.ஜ.க-வின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிசும் அவரது குழுவினரும் சேர்ந்து மகாராஷ்டிராவிலிருந்து மும்பையைப் பிரிக்க முயற்சிக்கின்றனர். மும்பையை தனி யூனியன் பிரதேசமாக்க பா.ஜ.க முயல்கிறது. இது தொடர்பான திட்டத்தை தேவேந்திர பட்நவிசும், அவரது ஆட்களும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளனர். குஜராத்தின் மோடி மாடலை பிரபலப்படுத்தவேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி சர்வதேச தலைவர்களையெல்லாம் குஜராத்திற்கு அழைத்து சென்றுகொண்டிருக்கிறார். மகாராஷ்டிராவும், மும்பையும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது கொடுக்கும் விழாவுக்கு முதல்வர் உத்தவ்தாக்கரேயை அழைக்காதது குறித்து விமர்சனம் செய்துள்ள சிவசேனா, லதா மங்கேஷ்கர் குடும்பம் முதல்வர் உத்தவ்தாக்கரேயை அவமானப்படுத்தி விட்டதாக குறிப்பிட்டிருக்கிறது.
ஏற்கெனவே சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவுத் மும்பையைப் பிரித்து தனி யூனியன் பிரதேசமாக மாற்ற பா.ஜ.க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், தற்போது சிவசேனா அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/vt2BnNE
0 Comments