நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மும்பையில் இருந்து கோவா சென்ற ஆடம்பர கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்திய போது ஆர்யன் கானும் அவருடன் 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்யன் கான் 4 வாரம் வரை சிறையில் இருந்தார். இவ்வழக்கில் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இரண்டு பேரைத்தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இவ்வழக்கை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர்.
அதன் பிறகு இதனை விசாரித்த சமீர் வாங்கடே மீது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்தது. சமீர் வாங்கடே ஷாருக் கானை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், சாதிச் சான்றிதழை திருத்தி மோசடி செய்தததாகவும் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டினார். இதையடுத்து இவ்வழக்கு விசாரணையில் இருந்து சமீர் வாங்கடே விடுவிக்கப்பட்டார். டெல்லியில் இருந்து சிறப்பு விசாரணைக்கு குழு வந்து இவ்வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் 6,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அக்குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கான் உட்பட 5 பேர் பெயர்கள் இடம் பெறவில்லை. மேலும் ஆர்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்றும், அவரிடம் போதைப்பொருள் இல்லை என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கடந்த மார்ச் மாதமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கவேண்டும். ஆனால் தாக்கல் செய்யவில்லை. 90 நாள்கள் அவகாசம் கொடுக்கும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு கேட்டுக்கொண்டது. இதையடுத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் 60 நாள்கள் அவகாசம் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டு இருப்பது குறித்து இவ்வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த சமீர் வாங்கடேயிடம் கேட்டதற்கு, ``சாரி நான் இதில் கருத்து தெரிவிக்க முடியாது. நான் இப்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பது குறித்து ஆர்யன் கானுக்காக வாதாடிய வழக்கறிஞர் முகுல் கூறுகையில், ஷாருக் கான் இப்போது நிம்மதி அடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/cNa5tCL
0 Comments