கேரளா விஷு புத்தாண்டு பண்டிகையை ஒட்டி அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது. குலுக்கலில் 10 கோடி ரூபாய்க்கான பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை வைத்திருப்பவர் பரிசு அறிவித்து பல நாட்கள் ஆகியும் அதனைப் பெற வரவில்லை. இந்தச் செய்தி பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில் அந்த லாட்டரி டிக்கெட் வாங்கிய நபர் யாரென தற்போது தெரிந்துள்ளது.
கன்னியகுமாரியைச் சேர்ந்த அரசு மருத்துவர் பிரதீப் குமார் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர்தான் அந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர். குலுக்கலுக்கு 12 நாட்கள் முன்பு திருவனந்தபுர விமான நிலையத்திற்கு உறவினரை அழைத்து வரச் சென்ற பிரதீப் குமார் அப்போது லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். வழக்கமாக லாட்டரி வாங்கும் பழக்கமில்லாதவருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டியிருக்கிறது.
பிரதீப் குமாரும் ரமேஷும் கேரளா லாட்டரி துறையில் அந்தச் சீட்டை தற்போது ஒப்படைத்திருக்கின்றனர். பரிசு விபரம் தங்களுக்கு தாமதாகவே தெரிய வந்தது என்றும் திருவிழா, உறவினர் ஒருவரின் மரணம் எனப் பல காரணங்களால் இன்று தான் வர முடிந்தது எனவும் தெரிவித்திருக்கிறார், பிரதீப்.
மலையாள புத்தாண்டு தினமான விஷு தினத்தை முன்னிட்டு ஒரு லாட்டரி சீட்டு 250 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 43.86 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில் 43,69,202 டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. லட்டரி டிக்கெட் மூலம் கேரளா அரசுக்கு சுமார் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/yIagr56
0 Comments