கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சு. இவர், தற்போது சவுதி அரேபியா - துபாய் எல்லைப் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சஞ்சுவுக்கும், கோட்டயம் பகுதியைச் சேர்ந்த சஞ்சனா (23) என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் இவர்களின் திருமணம் ஆன்லைன் வழியாகவே நடந்து முடிந்தது.
திருமணத்தைத் தொடர்ந்து துபாயில் உள்ள தன் கணவரைச் சந்திக்க சஞ்சனாவும், சஞ்சுவின் அம்மாவான ரூபி முஹம்மதும் (63) விசிடிங் விசாவில் கடந்த பிப்ரவரி மாதம் துபாய்க்குச் சென்றிருக்கின்றனர். இணையத்தில் திருமணமாகி முதன்முதலில் சந்தித்த புதுமணத் தம்பதியினர் மகிழ்ச்சியாக தங்களின் வாழ்க்கையைத் தொடங்கினர். இந்த நிலையில்தான், சஞ்சனாவுக்கும், ரூபிக்கும் அவ்வப்போது மனஸ்தாபம் ஏற்படத் தொடங்கியுள்ளது.
இந்த மனஸ்தாபம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே சென்றுள்ளது. வீட்டில் சமையல் வேலைகளையெல்லாம் ரூபி தான் செய்துவந்துள்ளார். சமீபத்தில் ரூபி சமைத்த உணவு சஞ்சனாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால், மாமியார் தன்னை சமைக்க விடுவது கிடையாது என்று கணவரிடத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சஞ்சனாவும், ரூபியும் பேசிக்கொள்வது கிடையாது.
இந்த நிலையில்தான், கடந்த திங்கள்கிழமை இருவருக்குமிடையே சண்டை பெரிதாகியுள்ளது. ஒருகட்டத்தில் கைகலப்பாக மாற, சஞ்சனா ரூபியின் தலையைப் பிடித்து சுவரில் இடித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்க்கும்போது, சஞ்சனா ரூபியின் தலையைப் பிடித்து இடித்துக்கொண்டிருந்திருக்கிறார். மயக்க நிலையிலிருந்த ரூபியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரூபி இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சவூதி போலீஸார் சஞ்சனாவை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். அதே வேளையில் இறந்த ரூபியின் உடலைக் கேரளா கொண்டுவரும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. மேலும், சஞ்சனாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான இரண்டே மாதத்தில் மருமகள் மாமியாரைக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/9F2DinY
0 Comments