ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணையும்போது ஒரு மதத்துக்கு மட்டும்தான் முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறியிருந்தால் எங்கள் முடிவு வேறாக இருந்திருக்கும் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியிருக்கிறார்.
கர்நாடகா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஹிஜாப், ஹலால், முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை, பள்ளிவாசல்களிலிருந்து ஒலிபெருக்கியை அகற்றுதல் என முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடத்தில் பேசினார். அப்போது அவர், ``ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணையும்போது ஒரு மதத்துக்கு மட்டும்தான் முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறியிருந்தால் எங்கள் முடிவு வேறாக இருந்திருக்கும்.
நாங்கள் இந்தியாவுடன் சேர முடிவு செய்தபோது, அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்படுவோம் என்ற நம்பிக்கையில்தான் சேர்ந்தோம். ஒரு மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும், மற்றவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று எங்களிடம் கூறப்படவில்லை. இது தெரிந்திருந்தால், ஒருவேளை எங்கள் முடிவு வேறாக இருந்திருக்கும். முஸ்லிம்கள், அவர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைக்காக ஒடுக்கப்படுகிறார்கள்.
ஒலிபெருக்கிகளை மற்ற மத இடங்களுக்குப் பயன்படுத்த உரிமை இருந்தால், முஸ்லிம்கள் ஏன் பள்ளிவாசல்களில் பயன்படுத்தக்கூடாது? கடந்த சில வாரங்களாக, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் ராம நவமி ஊர்வலங்களின்போது மோதல்கள் நடந்தன. ஏன் நடந்தன? ஊர்வலங்கள், உரத்த இசையுடன், முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகள் வழியாகச் சென்றபோது வன்முறை வெடித்தாகக் கூறப்படுகிறது.
அதே போலக் கர்நாடகாவில், மாணவர்கள் வகுப்பில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது, இந்து அமைப்புகளால் ஹலால் இறைச்சி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தது என சர்ச்சை தொடர்கிறது. ஹலால் இறைச்சியை விற்க வேண்டாம் என்கிறீர்களே ஏன்? எங்கள் மதம் ஹலால் இறைச்சியை உண்ணச் சொல்கிறது. ஏன் அதைத் தடுக்கிறீர்கள்? நாங்கள் உங்களை ஹலால் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினோமா? எந்த முஸ்லிமாவது ஹலால் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினாரா?
நீங்கள் விரும்பியதைச் சாப்பிடுங்கள். நாங்கள் விரும்புவதை நாங்கள் செய்கிறோம். முஸ்லிம்கள் எப்போதும் கோயில்களிலோ அல்லது பிற மதத் தலங்களிலோ ஒலிபெருக்கிகளை ஒருபோதும் எதிர்த்ததில்லை. ஆனால் எங்கள் மதத்தால், நாங்கள் உடை அணியும் விதத்தால் நீங்கள் ஏன் சஞ்சலப்படுகிறீர்கள்? இதற்கெல்லாம் ஒரே காரணம். ஆம்! அவர்கள் வெறுப்பைப் பரப்புகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/oyPCMXm
0 Comments