மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக பாஜக எதாவது ஒரு வகையில் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அமைதியாக இருந்த உத்தவ் தாக்கரே சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேயிடம் சொல்லி மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்றவேண்டும் என்ற பிரச்னையை கிளப்பியதாக சொல்கிறார்கள். இப்போது அது பூதாகரமாக வெடித்து இருக்கிறது.
அமராவதியை சேர்ந்த பெண் எம்.பி.நவ்நீத் ராணா, அவரின் கணவர் எம்.எல்.ஏ. ரவி ராணா ஆகியோர் சனிக்கிழமை முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு எதிரில் ஹனுமான் பாடல்களை பாடப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து சிவசேனாவினர் ராணா தம்பதியினர் மும்பையில் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். சனிக்கிழமை இரவு ராணா தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீஸ் நிலையத்தில் காணச்சென்ற பாஜக முன்னாள் எம்.பி.கிரீத் சோமையா மீதும் சிவசேனாவினர் கற்களை வீசித்தாக்கினர். இதனால் சிவசேனா, பாஜக இடையே மோதல் அதிகரித்துள்ளது. ராணா தம்பதியினர் நேற்று பாந்த்ரா விடுமுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை போலீஸ் காவலுக்கு அனுப்பவேண்டும் என்று மாநில அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இருவரின் இந்த செயலுக்கு பின்னால் யார் இருக்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டியிருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதோடு பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை மாலையில் மும்பை வருவது தெரிந்திருந்தும் பதட்டத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இருவரும் செயல்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருவர் மீதும் 124ஏ பிரிவின் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மனதில் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக அறிக்கைகளை வெளியிட்டதாக கூறி இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி இன்ஸ்பெக்டர் சைலேஷ் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனாலும் இருவரையும் போலீஸ் காவலுக்கு அனுப்ப மறுத்த நீதிமன்றம் இருவரையும் 14 நாள்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டது. இருவருன் ஜாமீன் மனு வரும் 29-ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. ஹனுமான் பாடல் பாட முயன்றதற்கு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு பாஜக முன்னாள் எம்.பி.கிரீத் சோமையா மீது சிவசேனா-வினர் தாக்குதல் நடத்தியதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மற்றொரு புறம் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று கிரீத் சோமையா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே நேற்று மாலையில் பிரதமர் நரேந்திர மோடி மும்பை வந்திருந்தார். அவரை வரவேற்க முதல்வர் உத்தவ் தாக்கரே செல்லவில்லை. அவருக்கு பதில் அவரின் மகன் ஆதித்ய தாக்கரேதான் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றார். அதோடு மறைந்த லதா மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமருக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்பட்டது. இவ்விழாவிலும் உத்தவ் தாக்கரே கலந்து கொள்ளவில்லை. அரசு தரப்பில் அமைச்சர் சுபாஷ் தேசாய் கலந்து கொண்டார். உத்தவ் தாக்கரே சிவசேனா பழம்பெரும் தொண்டர் சந்திராவின் இல்லத்திற்கு சென்று அவரை பார்த்து பாராட்டிவிட்டு வந்தார். 83 வயதாகும் சந்திரா மும்பையில் ஹனுமான் பாடல்களை பாட முயன்ற ராணா தம்பதிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கு வரும் படி உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக லதா மங்கேஷ்கர் குடும்பத்தினர் தெரிவித்தனர். பிரதமர் மோடி நிகழ்ச்சியை உத்தவ் தாக்கரே புறக்கணித்திருப்பது இரு கட்சிகளிடையேயான உறவில் விரிசலை அதிகரித்திருக்கிறது. பாஜகவை முழுவேகத்தில் எதிர்க்க உத்தவ் தாக்கரே முடிவு செய்து விட்டதை இது காட்டுவதாக அமைந்திருக்கிறது. எனவேதான் பாஜக இப்போது ராஜ் தாக்கரேயை தங்களது கையில் எடுத்திருக்கிறது. பாஜகவால் மகாராஷ்டிராவில் தனித்து களம் காண முடியாது. எனவேதான் ராஜ்தாக்கரேயை இப்போது களத்தில் இறக்கி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்
from தேசிய செய்திகள் https://ift.tt/rzMTUjo
0 Comments