கேரள மாநிலம் கண்ணூரில் சி.பி.எம் அகில இந்திய மாநாடு கடந்த 5-ம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெற்றது. அதில் சி.பி.எம் தேசிய பொதுச்செயளாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சீதாராம் யெச்சூரி மாநாட்டில் கலந்துகொண்டபோது பயன்படுத்திய 'கே.எல் 18 ஏ.பி 5000' என்ற பதிவெண் கொண்ட பார்ச்சூனர் கார் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த சித்திக் என்பவருக்கு சொந்தமானது என்றும், அவர் மீது கிரிமினல் வழக்குகள் உட்பட சுமார் பத்து வழக்குகள் உள்ளதாகவும், சித்திக் கார் கொடுத்து உதவியதற்கு சி.பி.எம் பதிலுக்கு உதவி செய்திருக்கலாம் என்றும் கண்ணூர் மாவட்ட பா.ஜ.க செயலாளர் ஹரிதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து கிரிமினல் குற்றவாளியின் காரை சி.பி.எம் அகில இந்திய செயலாளர் சீதாராம் யெச்சூரி பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக மீடியாக்களிடம் பேசிய சித்திக், "நான் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்தவன் அல்ல. முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவன். டிராவல் ஏஜென்சி வைத்திருப்பதால் நான் பலமுறை வாகனங்கள் வாடகைக்கு வழங்கி இருக்கிறேன். எந்த அரசியல் கட்சிக்காரர்கள் என்று பார்க்காமல் அனைவருக்கும் கார் வாடகை கொடுத்திருக்கிறேன். பவித்ரன் என்ற நண்பர் காரை வாடகைக்கு எடுத்திருந்தார். அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்று எனக்குத் தெரியாது. இதற்கு முன்பும் இது போன்று கார்கள் வாடகைக்கு கொடுத்திருக்கிறேன். ஏற்கெனவே அரசியல் வழக்குகள் என் மீதிருந்தன. ஆனால், இப்போது எந்த வழக்குகளும் என்மீது இல்லை" எனக்கூறினார்.
அந்த கார் தனி நபர் பயன்படுத்தும் வகையில் பதிவெண் கொண்டுள்ளது. எனவே காரை வாடகைக்கு விடுவதற்கு மோட்டார் வாகன பிரிவில் அனுமதி பெற்றுள்ளாரா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டு குறித்து கன்ணூர் மாவட்ட சி.பி.எம் செயலாளர் ஜயராஜன் கூறும்போது, ``சீதாராம் யெச்சூரி உபயோகித்த கார் வாடகைக்கு எடுக்கப்பட்டது. டிராவல் ஏஜென்சி மூலம் கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. கார் உரிமையாளர்களின் அரசியல் பின்னணி குறித்து நாங்கள் பார்க்கவில்லை, குறைந்த வாடகை மட்டுமே நாங்கள் பார்த்தோம். கட்சி மாநாடு பெரும் வெற்றி பெற்றுள்ளதால் பா.ஜ.க அமைதியற்று உள்ளது. அதனால்தான் இதுபோன்ற கேவலமான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள்.
கொட்டேஷன் அடிப்படையில்தான் வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. இதுபோன்ற ஏஜென்சிகளிடம் இருந்து எல்லா அரசியல் கட்சிகளும் கார்கள் வாடகைக்கு எடுப்பது உண்டு. கட்சி மாநாட்டில் குற்றம் கண்டுபிடிக்க முடியாததால் இதுபோன்ற குற்றங்களை கூறுகிறார்கள். இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. கட்சி மாநாட்டுக்காக கோழிக்கோட்டில் இருந்து மட்டுமல்ல எர்ணாகுளம் மாவட்டத்திலிருந்தும் வாகனங்கள் வாடகைக்கு எடுத்தோம். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை வெவ்வேறு விமான நிலையங்களில் வரவேற்பதற்காக அவ்வாறு ஏற்பாடு செய்திருந்தோம்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/wHYKVWn
0 Comments