அதிக பணம் கேட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள்; மகன் சடலத்தை 90 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற தந்தை!

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் சிட்வேல் மண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் 10 வயது சிறுவன் ஜெசேவா. இவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக திருப்பதி ருயா அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுவன் ஜெசேவா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

அதையடுத்து சிறுவனின் பெற்றோர் அவர் உடலை தங்கள் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கேட்டிருக்கின்றனர். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல அதிக பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தங்கள் ஏழ்மை நிலை காரணமாக சிறுவனின் பெற்றோர் ஊழியர்கள் கேட்ட தொகையை அளிக்க முடியாமல் பரிதவித்திருக்கின்றனர். இருப்பினும், மருத்துவமனை ஊழியர்கள் கறாராக பணம் கேட்டதால், மனமுடைந்த சிறுவனின் தந்தை தன் மகனின் உடலை பைக்கில் கொண்டு செல்ல முடிவு செய்தார். இதையடுத்து ஒரு பைக்கில் தன் மகனின் இறந்த உடலை 90 கிலோ மீட்டர் வரை எடுத்துச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ``திருப்பதி ருயா மருத்துவமனையில் இறந்த அப்பாவி சிறுவன் ஜெசவாவை நினைத்து என் இதயம் துடிக்கிறது. அவர் தந்தை ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளிடம் கெஞ்சினார். ஆனால், யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. வறுமைதான் அந்த தந்தையை இப்படி செய்ய வைத்திருக்கிறது. இந்தச் சம்பவம் மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்பதையே காட்டுகிறது. இத்தகைய மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/YB8sJ4U

Post a Comment

0 Comments