நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து சினிமாவில் நடிகர், நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் பலர் வீட்டில் கூட சொல்லாமல் மும்பை வந்துவிடுகின்றனர். அப்படி உத்தரப்பிரதேசத்தில் இருந்து இரண்டு இளம் பெண்கள் மும்பை வந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் சஹிதாஷேக்(20), ஷன்னத் ஷேக்(21). உறவினர்களான இருவரும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து காணாமல் போய்விட்டனர். இது தொடர்பாக அவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளை காணவில்லை என்று போலீஸில் புகார் செய்திருந்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இருவரும் எங்கு சென்றனர் என்பது மர்மமாகவே இருந்தது. இந்த நிலையில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு ஷன்னத் தனது தாயாருக்கு போன் செய்து பேசினார். எனினும் அவர் எங்கு இருக்கிறோம் என்பதை சொல்ல மறுத்துவிட்டார். உடனே ஷன்னத் தாயார் எந்த நம்பரில் இருந்து போன் வந்தது என்பது குறித்து போலீஸாரிடம் தெரிவித்தனர்.
போலீஸாரின் விசாரணையில் போன் மும்பை வசாய் பகுதியை சேர்ந்தது என்று தெரிய வந்தது. உடனே ஷன்னத்தின் குடும்பத்தினர் மும்பையில் இருக்கும் தங்களது உறவினர்களை தொடர்பு கொண்டு பேசினர். அதோடு அவர்களும் மும்பை வந்து போலீஸாரிடம் போன் நம்பரை கொடுத்து தங்களது மகள் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
போன் நம்பர் தொடர்ந்து ஆப் செய்யப்பட்டு இருந்ததால் போலீஸாரால் அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் ஷன்னத் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தான் வேலை செய்யும் இடத்தின் லோகோவை பதிவிட்டு இருந்தார்.
இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் பவுசாஹேப் கூறுகையில், ``ஷன்னத் தெரிவித்திருந்த கம்பெனி ஒரு பிளாஸ்டிக் பேப்ரிகேசன் கம்பெனியாகும். அந்த கம்பெனிக்கு சென்று விசாரித்த போது, அங்கு யாருக்கும் அப்பெண்ணை தெரிந்திருக்கவில்லை. அக்கம்பெனிக்கு வேறு ஒரு கிளை இருந்தது. அங்கு சென்று விசாரித்த போது ஷன்னத் அங்கு வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரிடம் சஹிதா எங்கே என்று கேட்டதற்கு வாடகை வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். இருவரும் மீட்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினோம்.
ஷன்னத் தான் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் மும்பை வந்ததாகவும், அதனால்தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக தகவல்களை பதிவிட்டதாக தெரிவித்தார். ஆவணங்களை சரிபார்த்துவிட்டு இருவரையும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தோம்” என்றார். இது குறித்து ஷன்னத் தந்தை கபீர் கூறுகையில், ``எனது மகளுக்கு திருமணமாகிவிட்டது. கணவர் வீட்டாருடன் மனஸ்தாபம் ஏற்பட்டு அவர்களுடன் வசிக்கவில்லை. ஆனால் எதற்காக அலகாபாத்தை விட்டு வந்தார் என்று தெரியவில்லை. எங்களது மகள் திரும்ப கிடைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனால் மகாராஷ்டிரா போலீஸார் எங்களது மகளை தேடி கண்டுபிடித்து கொடுத்துவிட்டனர். அவர்களிடம் நாங்கள் ஏன் வீட்டை விட்டு வந்தீர்கள் என்று கூட கேட்கவில்லை. அவர்கள் இருந்த வாடகை வீட்டில் மின்சாரம் கூட இல்லை. தினமும் 250 ரூபாய் சம்பளத்தில் ஷன்னத் வேலை செய்து வந்தார். ஷன்னத் தனது அம்மாவுக்கு போன் செய்து தாங்கள் சிக்கலில் இருப்பதாக தெரிவித்தார். உடனே அவர்களை தேடினோம். மும்பை போலீஸார் எங்களது மகளை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர். இதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/13jNPYH
0 Comments