உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள அனைத்து இஸ்லாமிய மதரஸாக்களிலும் இனி தேசிய கீதம் கட்டாயம் பாடப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரியத் தலைவர் இப்திகார் அகமது ஜாவேத் தலைமையில் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
மதரஸாக்கள்:
இந்தியாவில் மொத்தமுள்ள 19,132 அரசு அங்கீகாரம் பெற்ற மதரஸாக்களில், சுமார் 16,500 மதரஸாக்கள் உத்தரப்பிரதேசத்தில் இருக்கின்றன. மேலும், இங்கு சுமார் 50,000-க்கும் மேற்பட்ட அரசு அங்கீகாரம் பெறாத மதரஸாக்களும் இயங்கி வருகின்றன எனக் கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல்முறையாக உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக்கொண்டதும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களிலும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), குடியரசு தினம் (ஜனவரி 26) உள்ளிட்ட முக்கிய தினங்களில் தேசியக் கொடி ஏற்றுவது, தேசிய கீதம் பாடுவது உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
மேலும், கடந்த 2018-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, உத்தரப்பிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்திலுள்ள ஒரு மதரஸாவில், இஸ்லாமிய மாணவர்கள் தேசியகீதம் பாடுவதைத் தடுத்ததாகக்கூறி அங்குள்ள மதகுருமார்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. மேலும், சம்மந்தப்பட்ட மதரஸாவின் பதிவு உரிமமும் மாநில அரசால் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், நடந்த முடிந்த 2022 உ.பி. சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக தொடர்ந்து யோகி ஆதித்யநாத் முதல்வராகியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த மார்ச் 24-ம் தேதி உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரியக் (UP Board of Madarsa Education) கூட்டம் நடைபெற்றது. வாரியத் தலைவர் இஃப்திகார் அஹ்மத் ஜாவெத்(Iftikhar Ahmad Javed) தலைமையேற்று நடத்திய இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
மதரஸா கல்வி வாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துப் பேசிய இஃப்திகார் அஹ்மத் ஜாவெத், ``பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு (Teachers’ Eligibility Test -TET) நடத்தி அதன் அடிப்படையில், ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவதுபோல, மதரஸாக்களிலும் ஆசிரியர்கள் நியமனத்துக்கென்று தனியாக, `மதரஸா ஆசிரியர் தகுதித் தேர்வு (Madrassa Teachers Eligibility Test (MTET))' முறை அறிமுகப்படுத்தப்படும். அந்தத் தேர்வு செயல்முறை வாரியத்தால் இறுதி செய்யப்படும். மேலும், இது சம்மந்தமான அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்" என்றார்.
ஆதார் இணைப்பு:
``மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதற்கு மதரஸா ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு மற்றவர்களை ஊக்குவிக்கிறார்கள் என்று காரணம் கூறப்படுகிறது. எனவே, குறைந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, மதரஸா ஆசிரியர்கள் எத்தனை பேர் தங்களின் குழந்தைகளை தனியார் கான்வென்ட் பள்ளிகளில் படிக்கவைத்து வருகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க, வாரியத்தால் கணக்கெடுப்பு நடத்தப்படும். மேலும், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வருகைப் பதிவை சரிபார்க்க, மாணவர்கள் விவரங்களுடன் ஆதார் அட்டை இணைக்கப்படும்; மேலும், ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க `பயோமெட்ரிக் அட்டென்டன்ஸ்' முறையும் கொண்டுவரப்படும்" எனத் தெரிவித்தார்.
தேசிய கீதம் கட்டாயம்:
மிக முக்கியமாக, மதரஸாக்களில் தினமும் காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக, உருது மொழியில் இஸ்லாமியப் பிரார்த்தனைப் பாடல் பாடப்படுவது வழக்கம். தற்போது அந்த வழக்கத்தை மாற்றி, ``அரசு அங்கீகாரம் பெற்ற, பெறாத அனைத்து மதரஸாக்களிலும் காலை வகுப்புகளுக்கு முன்னதாகப் பாடப்படும் பிரார்த்தனைப் பாடலுக்கு பிறகு, இந்திய தேசிய கீதம் கட்டாயம் பாடப்பட வேண்டும். மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் சேர்ந்து பாடவேண்டும்" என உ.பி. அரசின் மதரஸா கல்வி வாரியம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த உத்தரவு குறித்துப் பேசிய இஃப்திகார் ஜாவேத், ``பல்வேறு பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படுகிறது. மதரஸா மாணவர்களிடமும் தேசபக்தியை வளர்க்க விரும்புகிறோம். இதன் மூலம் மதப் படிப்பு மட்டுமல்லாமல் அவர்கள் நமது வரலாறு, கலாசாரம் பற்றியும் அறிந்து கொள்ளவேண்டுமென விரும்புகிறோம். ஏற்கெனவே சில மதரஸாக்களில் தேசிய கீதம் பாடப்பட்டுதான் வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து மதரஸாக்களிலும் இந்த முறை கட்டாயமாக அமல்படுத்தப்படும்” என தெரிவித்திருக்கிறார்.
மதரஸா வாரியத் தேர்வுகள் வரும் மே மாதம் 14-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/juDR2Sa
0 Comments