`ஷூட்டிங் ஸ்பாட் பாலியல் அத்துமீறல்கள்; தனிக் குழு அமைப்பது கட்டாயம்!' - கேரள நீதிமன்றம் உத்தரவு

சினிமா துறையில் நடிகைகள் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக புகார்கள் இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக 2018-ல் கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகைக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

ஷூட்டிங் ஸ்பாட்

இதை அடுத்து மலையாள சினிமா துறையில் பெண்களின் புகார்களை விசாரித்து தீர்வுகாண குழு ஏற்படுத்தப்பட வேண்டும் என நடிகைகள் சங்கமான விமன்ஸ் இன் சினிமா கலெக்டிவ் (wcc) உள்ளிட்ட அமைப்புகள் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தன. அந்த மனுவை கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது. படப்பிடிப்பு தளங்களில் பெண்களின் புகார்களை விசாரித்து தீர்வுகாண துறை ரீதியான குழு ஏற்படுத்த வேண்டும் என கேரளா ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

`சினிமாவை பொறுத்தவரை படப்பிடிப்பு நடக்கும் ஷூட்டிங் ஸ்பாட்தான் பணியிடம். மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா, பெப்கா, கேரள பிலிம் சேம்பர் ஆஃப் காமஸ், கேரள பிலிம் புரடியூசர்ஸ் அசோசியேஷன் போன்ற சினிமா அமைப்புகளை நடிகைகள் மற்றும் கலைஞர்களின் முதலாளிகளாக பார்க்க முடியாது. இந்த அமைப்புகளில் பெண்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தால் விசாரணை குழு ஏற்படுத்த வேண்டும்' என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு சினிமா துறையில் உள்ள பெண்களுக்கு ஆத்மார்த்த நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களின் சுயமரியாதையையும், உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் விதமாகவும் அமையும் எனவும் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Law (Representational Image)

நடிகைகள் சங்கமான விமன்ஸ் இன் சினிமா கலெக்டிவ் அமைப்பு மனுதாக்கல் செய்த சமயத்தில் மாநில மகளிர் ஆணையத்தையும் இதில் சேர்த்திருந்தது. கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது நடிகைகள் சங்கத்தின் கோரிக்கை நியாயமானது என மகளிர் ஆணையம் தெரிவித்திருந்தது. ஐகோர்ட் தீர்ப்பை மலையாள நடிகைகள் சங்கம் வரவேற்றுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/5b8Jk1D

Post a Comment

0 Comments