`இந்து திருமணச் சட்டத்தின்படி..!' - கணவனுக்கு மாதம் ரூ.3,000 ஜீவனாம்சம் கொடுக்க மனைவிக்கு உத்தரவு!

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் பகுதியைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவருக்கு 1992-ம் ஆண்டு தயானந்த் ஷிண்டே என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் 2015-ம் ஆண்டு அந்தப் பெண் ஆசிரியர் தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டார். ஆசிரியை வருமானம் ஈட்டுபவராக இருப்பதால் இந்து திருமணச்சட்டத்தின் படி தனக்கு மனைவி ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி ஷிண்டே நாண்டெட் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நாண்டெட் நீதிமன்றங்கள் 2017ம் ஆண்டு ஷிண்டேவுக்கு அவர் மனைவி மாதம் ரூபாய் 3 ஆயிரம் ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட்டது.

ஆனால், அந்தப் பெண் ஆசிரியர் தன் கணவருக்கு ஜீவனாம்சம் கொடுக்காமல் மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் நாண்டெட் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி பாரதி டாங்கரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மும்பை உயர் நீதிமன்றம்

இதில் ஆசிரியை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``விவாகரத்து பெற்று நீண்ட நாள்களுக்குப் பிறகு ஜீவனாம்ச உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அது செல்லுபடியாகாது" என்று குறிப்பிட்டார். ஆனால் பெண் ஆசிரியை மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள தீர்ப்பை மேற்கோள் காட்டி, ``இந்து திருமணச் சட்டத்தின் 25-ம் பிரிவின் கீழ் கோர்ட் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியும். மாதாந்திர அடிப்படையில் அல்லது ஒரே தொகையாகவோ வழங்க உத்தரவிட முடியும்" என்று தெரிவித்தார்.

ஜீவனாம்சம்!

அதோடு 2017-ம் ஆண்டிலிருந்து ஜீவனாம்சம் கொடுக்காமல் இருப்பதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணியாற்றி வரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒவ்வொரு மாதமும் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் சம்பளத்தில் 5 ஆயிரம் பிடித்தம் செய்து, அதை கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும். அதோடு ஆசிரியை தன் விவாகரத்தான கணவருக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்து திருமணச் சட்டத்தின் 25-வது பிரிவு ஆதரவற்ற கணவன்/மனைவிக்கான ஏற்பாடாக இருப்பதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/KO7sVxZ

Post a Comment

0 Comments