மும்பை மாநகராட்சிக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தல்தான் தங்களின் அடுத்த குறி என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது. மும்பை மாநகராட்சியை சிவசேனா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், மும்பை மாநகராட்சியில் சிவசேனா தலைவர்கள் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்திருப்பதாக பா.ஜ.க முன்னாள் எம்.பி கிரீத் சோமையா தெரிவித்துள்ளார். கிரீத் சோமையா ஏற்கெனவே தாக்கரே குடும்பத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர். தாக்கரே குடும்பத்திற்கு அலிபாக் பகுதியில் பண்ணை வீடுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் சிவசேனா தலைவர்களை குறிவைத்து ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருக்கிறார். இது குறித்து நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``மும்பை மாநகராட்சியில் நிலைக்குழுத் தலைவர் யஷ்வந்த் ஜாதவும் அவர் மனைவியும் சேர்ந்து கடந்த 24 மாதங்களில் 36 பழைய கட்டடங்களை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். இதில் ஆயிரம் வீடுகள், கடைகள் இருக்கின்றன.
இதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. அடுத்த சில தினங்களில் அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசேனா செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில், கிரீத் சோமையாவும் அவர் மகனும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். அதோடு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரூ.260 கோடி அளவுக்கு மும்பை அருகில் பால்கரில் கட்டுமானப்பணியில் முதலீடு செய்திருப்பதாகவும், அந்த கம்பெனியில் கிரீத் சோமையா மகன் இயக்குனராக இருக்கிறார் என்றும் சஞ்சய் ராவுத் குற்றம்சாட்டியிருந்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/rfgBRHz
0 Comments