மும்பை மலாடில் வசிப்பவர் நிதா ஷா (60). இவர் தன் இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, தனியாக வசித்து வருகிறார். நிதா ஷா தன்னுடைய 60-வது பிறந்தநாளையொட்டி மகாலட்சுமி கோயிலுக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்றார். இரவு வீடு திரும்பியபோது, வீட்டிலிருந்த தங்க நகைகள், டிவி உட்பட அனைத்துப் பொருள்களும் திருடப்பட்டு இருந்தன. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிதா, போலீஸில் புகார் செய்தார். நிதா வசித்த வீட்டிற்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் அந்தப் பகுதியில் டாக்ஸி ஒன்று அடிக்கடி வந்துச் சென்றதை கண்டுபிடித்தனர். அந்த டாக்ஸியின் மீது சந்தேகப்பட்ட போலீஸார் அதை கண்காணிக்க ஆரம்பித்தனர். தனிப்படை அமைத்து 7 நாள்கள் தீவிரமாக கண்காணித்து, அதன் மூலம் திருடர்கள் 5 பேரைக் கைது செய்தனர்.
இது குறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் டி.லிகாடே கூறுகையில், ``டாக்ஸியின் மீது சந்தேகம் எழுந்தவுடன் அதை நாங்கள் தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தோம். சப் இன்ஸ்பெக்டர் மீனாக்ஷி மற்றும் கான்ஸ்டபிள் கைலாஷ் ஆகியோர் திருடர்களை கண்டுபிடிப்பதற்காக சாதாரண உடையில் காதலர்கள் போன்று டாக்ஸியைப் பின் தொடர்ந்து கண்காணித்தனர். அவர்களை கான்ஸ்டபிள் பசவேஷ்வர் ஆட்டோவில் ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்றார். சில நேரங்களில் போலீஸார் தள்ளுவண்டியில் பழங்கள், காய்கறி விற்கும் வியாபாரியாகவும் நடித்து திருடர்களை கண்காணித்தனர்.
அதன் மூலம், டாக்ஸி டிரைவர் நவுஷத் கான் என்பவரை பிடித்து விசாரித்தோம். அதில், அவரின் நண்பர்கள் இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார். அதையடுத்து சதாம் கான், அப்துல் பதான், ரோனி, குட்டு ஆகியோரைக் கைது செய்தோம். இவர்கள் அனைவர் மீதும் திருட்டு மற்றும் வழிப்பறி தொடர்பாக 30 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கண்காணிப்பு கேமரா மற்றும் வாட்ச்மென் இல்லாத கட்டடங்களை முதலில் தேடுவார்கள். அதன் பிறகு அந்தக் கட்டடத்தில் யார் வீட்டில் ஆள்கள் வெளியில் செல்கின்றனர் என்பதை கண்காணித்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். திருடப்படும் பொருள்களை குட்டுதான் விலைக்கு வாங்குவது வழக்கமாகும். இது தொடர்பாக அவர் மீது மட்டும் 29 வழக்குகள் இருக்கின்றன. இதற்காகவே குட்டுவை நகரை விட்டு வெளியேற்றி இருக்கிறோம். குட்டுவிடமிருந்து நிதா ஷா வீட்டில் திருடப்பட்ட 16 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/JuH8qOb
0 Comments