உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவானது பிப்ரவரி 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவில் இதுவரை 45 மாவட்டங்களில், 195 சட்டமன்ற தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து 5-ம் கட்ட வாக்குப்பதிவானது, 11 மாவட்டங்களில் 61 தொகுதிகளுக்கு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, ``பிரதமர் மோடியும் அவர் நண்பர்களும் தான், இந்தியாவின் வேலைவாய்ப்புத்துறையின் முதுகெலும்பை உடைத்தார்கள். மோடி உத்தரப்பிரதேசத்துக்கு வரும்போதெல்லாம் ஏன் வேலைவாய்ப்பு குறித்து தேர்தல் பிரசாரங்களில் பேசுவதில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக ஏன் கூறவில்லை. 2014-ல் கூறியபடி அவர்கள் எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார்கள், இனிவரும் காலங்களில் எத்தனை பேருக்கு வேலை கொடுப்பார்கள் என்பது பற்றி ஏன் கூறாமல் இருக்கிறார்.
எங்களது 70 ஆண்டுகால ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது உண்மைதான், உண்மையில் எங்களது 70 ஆண்டுகால ஆட்சியில் அம்பானி, அதானிக்கு எதுவுமே நடக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/yTA8LZE
0 Comments