கோர்ட்டில் இருந்து லீக் ஆனதா வீடியோ? ஜனாதிபதி, பிரதமரிடம் நடிகை புகார்

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் 2017-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. பல்சர் சுனி என்ற கார் டிரைவர் மூலம் நடிகர் திலீப் அந்த நடிகையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த வைத்ததுடன், அதை வீடியோவாக பதிவு செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் கூறப்பட்டது. அந்த வழக்கில் பல்சர் சுனி இப்போதும் சிறையில் இருக்கிறார். இதெற்கெல்லாம் மூலகாரணம் என போலீஸாரால் கூறப்படும் நடிகர் திலீப் 74 நாள்கள் சிறையில் இருந்துவிட்டு, ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அவர் ஜாமினில் வெளியே வருவதற்காக, பல்சர் சுனி என்பவரை யார் என்றே தெரியாது என அப்போது கூறியிருந்தார்.

சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார்

இதற்கிடையே நடிகர் திலீபின் முன்னாள் நண்பரான சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் என்பவர் திடீரென சில தகவல்களை வெளியிட்டார். அதில், `நடிகர் திலீபிற்கு முன்பே பல்சர் சுனியை தெரியும். திலீப் தன்னை கைது செய்த போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார். நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை வி.ஐ.பி ஒருவர் நடிகர் திலீபிடம் காண்பித்தார். நடிகர் திலீப் அந்த வீடியோவை பார்த்தார்' என்பது போன்ற பல தகவல்களை பாலசந்திரகுமார் தெரிவித்தார்.

Also Read: நடிகர் திலீப் ஒப்படைத்த 6 மொபைல்போன்கள்... அந்த `மேடம்' யார்?! - போலீஸ் தீவிர விசாரணை

இது சம்பந்தமாக இயக்குநர் பாலசந்திரகுமார் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அதிகாரிகளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக கிரைம் பிரான்ச் போலீஸார் நடிகர் திலீப் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் நடிகர் திலீப் முன் ஜாமின் பெற்றதுடன், கோர்ட் வழிகாட்டுதல்படி 33 மணி நேரம் கிரைம் பிரான்ச் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைத்தார்.

இதையடுத்து நடிகர் திலீப் பயன்படுத்திய மொபைல் போன்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் தனது மூன்று மொபைல் போன்கள், தன் சகோதரன் உள்ளிட்டவர்களின் போன் என மொத்தம் ஆறு மொபைல் போன்களை திலீப் கோர்ட்டில் ஒப்படைத்தார். அவை கோர்ட் உத்தரவுக்குப் பின் ஃபாரன்சிக் பரிசோதனைக்காக அனுப்பப்பட உள்ளது.

Sexual Harassment (Representational Image)

இந்த நிலையில், இயக்குநர் பாலசந்திரகுமார் தன்னிடம் பல தவணையாக பணம் வாங்கியதாகவும், மேலும் பணம் கேட்டபோது கொடுக்காததால் தனக்கு எதிராக மாறியதாகவும், அவரது திரைப்படத்தில் நான் நடிக்க மறுத்ததும் அவர் எதிரியாக மாறியதற்கு முக்கிய காரணம் எனவும் தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாங்கித்தருவதாகக் கூறி இயக்குநர் பாலசந்திரகுமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கண்ணூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கொச்சி சிட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்திவிட்டு வழக்குப் பதிவு செய்வதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் நடிகை பாலியல் வழக்கு மீண்டும் பரபரப்பான நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில், நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ எர்ணாகுளம் செஷன்ஸ் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த வீடியோ கோர்ட்டில் இருந்து லீக் ஆகியிருப்பதாக வரும் செய்திகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட நடிகை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஐகோர்ட் தலைமை நீதிபதி, மத்திய விஜிலென்ஸ் கமிஷனர், மத்திய மாநில மகளிர் ஆணையங்களுக்கும் அந்த கடிதத்தின் நகல்களை அனுப்பியுள்ளார்.

நடிகர் திலீப்

Also Read: தீவிரமாகும் நடிகை பாலியல் வழக்கு; அதிகாரிகளுக்கு எதிராக சதித்திட்டம்! - விசாரணைக்கு ஆஜரான திலீப்!

நடிகை எழுதிய கடிதத்தில், ``என்னை பாலியல் தொல்லை செய்த வீடியோ காட்சிகள் எர்ணாகுளம் செஷன்ஸ் கோர்ட்டில் இருந்து லீக் ஆனதாகத் தகவல்கள் வருகின்றன. அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும். அந்த வீடியோ வெளிநாடுகளில் உள்ள சிலருக்கு கிடைத்திருப்பதாகத் தகவல் வந்துள்ளது, எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. இது என் தனிப்பட்ட உரிமையை பறிக்கும் செயல். கோர்ட்டில் இருந்து நீதியை எதிர்பார்த்து காத்திருப்பவள் நான். எனவே இதில் நீதி விசாரணை வேண்டும்" என பாதிக்கப்பட்ட நடிகை கூறியுள்ளார். கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட வீடியோ வெளியே லீக் ஆனதாக நடிகை புகார் அளித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/wsMfBvq

Post a Comment

0 Comments