கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷ், குடியிருப்புகளில் புகுந்த ராஜநாகம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ளார். எந்தவித உபகரணமும் இல்லாமல் வாவா சுரேஷ் வெறுங்கையால் பாம்புகளைப் பிடிப்பதைப் பார்க்கவே மக்கள் கூட்டமாகக் கூடுவார்கள். கடந்த 31-ம் தேதி மாலை கோட்டயம் மாவட்டத்தில், சங்கனாச்சேரி அருகே உள்ள குறிச்சிப் பகுதியில் பாம்பு பிடிக்கச் சென்றார் சுரேஷ். ஒரு கருங்கல் காம்பவுண்ட் சுவர் இடுக்கில் புகுந்த 7 அடி நீளமுள்ள நாகப்பாம்பின் வாலைப் பிடித்து சாக்கில் அடைக்க முயன்றபோது வாவா சுரேஷின் வலது தொடையில் பாம்பு கடித்தது. தொடையைக் கடித்துப் பிடித்திருந்த பாம்பை இழுத்து கீழேபோட்டவர், பின்பு பாம்பை பிடித்து ஒரு டப்பாவில் அடைத்துவிட்டு மயங்கினார்.
குறிச்சிப் பகுதி மக்கள் வாவா சுரேஷை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். வாவா சுரேஷின் உடல்நலனுக்காக மக்கள் பிரார்த்தனை நடத்தினர். இந்த நிலையில் வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read: பிரார்த்தனைகள் சரிதான்; ஆனால், `பாம்பு பிடி மன்னன்' வாவா சுரேஷ் செய்த தவறு என்ன தெரியுமா?
நேற்று மதியம் வென்டிலேட்டரிலிருந்து மாற்றப்பட்ட நிலையில் சுயமாக சுவாசம் எடுத்தார் வாவா சுரேஷ். இந்த நிலையில் இன்று மெடிக்கல் காலேஜ் சூப்பிரண்ட் ஜெயக்குமார் வாவா சுரேஷிடம் பேசியுள்ளார். `உங்கள் பெயர் என்ன?' எனக் கேட்டபோது, `நான் சுரேஷ், வாவா சுரேஷ்' என பதில் சொல்லியிருக்கிறார். வாவா சுரேஷ் பேசத் தொடங்கியிருப்பது அவரின் உயிரைக் காக்கப் போராடிய மருத்துவர்களுக்கும், வாவா சுரேஷுக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. மருத்துவர்களின் கேள்விக்கு வாவா சுரேஷ் தெளிவான பதிலைக் கூறியிருப்பது, மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கான அறிகுறி என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாம்பு கடித்தது குறித்து வாவா சுரேஷிடம் கேட்கவில்லை எனவும், அப்படிக் கேட்டால் ஒருவேளை மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால் அந்தக் கேள்வியை தவிர்த்ததாகவும் மெடிக்கல் காலேஜ் சூப்பிரண்ட் ஜெயக்குமார் தெரிவித்தார். வாவா சுரேஷ் படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்து திரவ ஆகாரம் சாப்பிடுவதாகவும், இன்று முழுவதும் ஐ.சி.யூ-வில் வைத்து சிகிச்சை அளித்துவிட்டு, பின்னர் வார்டுக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வாவா சுரேஷின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் குறிச்சிப் பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/71DO3mK
0 Comments