முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியும் அவரின் மனைவியும் அடிக்கடி எதாவது சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகிவிட்டது. தற்போது குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக வினோத் காம்ப்ளி கைது செய்யப்பட்டுள்ளார். வினோத் காம்ப்ளி நேற்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் இருந்து குடிபோதையில் காரை வெளியில் எடுத்தார். அந்நேரம் கார் எதிர்பாராத விதமாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு கிரிக்கெட் வீரரான ரமேஷ் பவாரின் மனைவி கார் மீது மோதிக்கொண்டது. அதோடு கட்டடத்தின் கேட் மீதும் இடித்துக்கொண்டது.
இச்சம்பவத்தை தொடர்ந்து கட்டடத்தின் வாட்ச்மென் மற்றும் அதில் குடியிருக்கும் கிரிக்கெட் வீரர் ரமேஷ் பவாரின் மனைவி தேஜஸ்வி உட்பட சிலருடன் வினோத் காம்ப்ளி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு வேகமாக காரை எடுத்துக்கொண்டு வெளியில் புறப்பட்டு சென்றார். தேஜஸ்வி இது குறித்து வினோத் காம்ப்ளி மீது போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனே விரைந்து வந்த வினோத் காம்ப்ளியின் காரை மடக்கி அவரை கைது செய்தனர்.
அவர் மீது குடிபோதையில் கார் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் காம்ப்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 100 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கும் வினோத் காம்ப்ளியிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மோசடிப் பேர்வழிகள், வங்கி அதிகாரிகள் என்று கூறி ரூ.1.14 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வினோத் காம்ப்ளியும், அவரின் மனைவி ஆண்ட்ரியா ஹவிட்டும் சேர்ந்து மால் ஒன்றில் பாடகர் அங்கிட் திவாரியின் தந்தை ராஜ்குமார் திவாரியை அடித்து உதைத்தனர். காம்ப்ளியின் மனைவி தனது செருப்பை எடுத்து காட்டி மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 2009-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த காம்ப்ளி, மனைவி ஆகிய இருவரும் வீட்டு வேலைக்கார பெண்ணை அடித்து உதைத்ததாகவும் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பராக தன்னை காட்டிக்கொள்ளும் வினோத் காம்ப்ளி மொத்தம் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/thsiXlK
0 Comments