கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு, எதிர்ப்பு கிளம்பிய விவகாரம், பெரும் பரபரப்பானது. ஹிஜாப் விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றம் தொடங்கி இப்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஹிஜாப் வழக்கில், ``இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை மாணவர்கள் ஹிஜாப், காவித்துண்டு போன்ற உடைகளை பள்ளி, கல்லூரிக்குள் அணிந்து செல்லக்கூடாது" என்று கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.
அதையடுத்து, ஹிஜாப் விவகாரம் தொடர்பான கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்ககோரி உச்ச நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த மனுவில், "இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வியைத் தொடர அனுமதிக்காததன் மூலம் அவர்களின் சுதந்திரத்தை குறைக்க உயர் நீதிமன்ற உத்தரவு முயல்கிறது. ஹிஜாப் அணிவதற்கான உரிமையானது, அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் 19(a)(b), தனியுரிமை மற்றும் மனசாட்சிக்கான உரிமை ஆகியவற்றால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துரிமையின் வரம்பிற்குள் வருகிறது. சரியான சட்டம் இல்லாமல் இதை மீற முடியாது" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, ``அங்கு என்ன நடக்கிறது என்பதை நாங்களும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். மாநிலத்திலும் விசாரணையிலும் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். இதை தேசிய அளவில் கொண்டு வருவது சரியானதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருடைய அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்தார். மேலும் அவசர வழக்காக விசாரிக்கவும் மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம்.
from தேசிய செய்திகள் https://ift.tt/VBWxmZn
0 Comments