கேரளாவில் `பாம்பு மனிதன்', `பாம்பு பிடி மன்னன்' என்றழைக்கப்படும் வாவா சுரேஷுக்காக மாநிலம் கடந்தும் பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன. இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்திருக்கிறார். அதிலும் ராஜநாகம் போன்ற பாம்புகளும் அடக்கம் என்கிற செய்தியும், பாம்புகளுடன் அவர் இருக்கும் படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Also Read: வாவ சுரேஷ்: பலமாகக் கடித்த பாம்பு; விடாமல் பிடித்த `பாம்பு பிடி மன்னன்’ கவலைக்கிடம்! - அதிர்ச்சி
கோட்டயம் அருகே ஒரு நாக பாம்பை பிடிக்கும்போது, அது சுரேஷை கடித்துவிட்டது. சுரேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வாவா சுரேஷ் பாம்பிடம் கடி வாங்குவது முதல் முறை அல்ல.
மனிதாபிமான அடிப்படையில் வாவா சுரேஷுக்காக பிரார்த்தனை செய்தாலும், அறிவியல்பூர்வமாக பார்த்தால் வாவா சுரேஷ் செய்த தவறுகள் ஏராளம். ``பாம்பு பிடிப்பது என்பது ஓர் கலை. ஆனால், சமீப காலமாக அதை சிலர் தங்கள் திறமைகளை, வீரத்தையும் வெளிக்காட்டும் இடமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
பாம்பு பிடிப்பதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. அதை மீறும்போது இதுபோன்ற விளைவுகளை சந்தித்துதான் ஆக வேண்டும்" என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ராமமூர்த்தி கூறுகையில், ``பாம்புகளிடம் கடிபடுபவர் ஒரு நல்ல பாம்பு பிடிப்பாளர் இல்லை என்பார்கள். காட்சிப்படுத்துவதே முதல் நோக்கம் என்கிறபோது கவனக்குறைவு உண்டாவதும், அதனால் இப்படி கடிபெறுவதும் இயல்புதான். முக்கியமாக, கருவிகளின்றி பாம்புகளை வெறுங்கைகளால் இப்படி கவனக்குறைவாக கையாள்வது தவறானது என்கின்றனர் நிபுணர்கள்.
வாவா சுரேஷ் இதற்கு முன்பும் பலமுறை பாம்பு கடித்து மரணத்தின் எல்லை வரை சென்றிருக்கிறார். பாம்பு கடியால் அவருக்கு சில விரல்களும் எடுக்கப்பட்டுள்ளன. இவர் மட்டுமல்ல, இன்னும் பலர் வெறும் கைகளால் பாம்புகளை பிடிக்கின்றனர். அதில் அவர்களுக்கு ஒருவித த்ரில்லும், ஹீரோயிசமாகவும் ஒரு சேர உணர்வதே காரணமாக இருக்கலாம்.
பாம்புகளை பிடித்த பின்னர், அவற்றை உடனடியாக பாதுகாப்பான பைகளில் அடைப்பதில்லை. சுற்றியிருக்கும் கூட்டத்துக்கு படம் பிடிக்க போஸ் கொடுத்து, சமூகவலைதளங்களில் பதிவிடுகின்றனர். அதற்கு கிடைக்கும் கமென்ட்ஸ், லைக் போன்றவற்றுக்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள்.
Also Read: 300 முறைகள் விஷப்பாம்பு கடித்தும் உயிர் தப்பிய வாவா சுரேஷ்! #WildlifeConservationist
2014-ம் ஆண்டே WCCB (Wildlife crime control Bureau) வெறும் கைகளால் பாம்புகளை பிடித்து அந்தப் படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றக் கூடாது மீறினால் நடவடிகை எடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். வெறும் கைகளால் பிடிப்பதால், மனிதன் மற்றும் பாம்பு இருவருக்கும் பெரிய பாதிப்புகள் உண்டாக வாய்ப்பிருக்கிறது” என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/JI21pcHma
0 Comments