மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் உள்ள தானே மாவட்டத்தின் ஷஹாப்பூர் தாலுகாவில் திடீரென இரண்டு நாட்களுக்கு முன்பு கோழிப்பண்ணையில் கோழிகள் மர்மமான முறையில் இறந்தன. ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் இறந்ததால் உள்ளூர் கால்நடைத்துறை அதிகாரிகள் இறந்த கோழிகளின் மாதிரிகளை புனே மற்றும் போபாலில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி சோதனை செய்தனர்.
இதில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பரவி இருப்பது தெரிய வந்தது. உடனே பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்ட வல்ஹோலி கிராமத்தை சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நோய் தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கிலோமீட்டருக்குள் இருக்கும் கோழிப்பண்ணையில் இருந்த 25,000 கோழிகள் இரண்டு நாட்களில் அழிக்கப்பட்டது. அதோடு 1600-க்கும் அதிகமான முட்டைகள், கோழித்தீவனம் போன்றவற்றையும் அழிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேஷ் நர்வேகர் உத்தரவிட்டார். பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து மும்பைக்குள் கோழிகளை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தானே மாவட்டம் மட்டுமல்லாது மும்பை அருகில் உள்ள மற்றொரு மாவட்டமான பால்கரிலும் பறவைக்காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வசாய் அருகில் உள்ள அகாஷி மற்றும் வதார் ஆகிய கிராமங்களில் இருக்கும் பண்ணையிலும் கோழிகள் மர்மமான முறையில் இறந்தன.
அவற்றின் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பறவைக்காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பண்ணையில் உள்ள 2,500 கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. அதோடு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு மாவட்டத்திலும் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோழிப்பண்ணையில் இருந்து கோழிகள் மும்பைக்கு விற்பனைக்கு அனுப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/d5gr8yG
0 Comments