101 ஆடுகள்... தடபுடல் விருந்து! - ஒவைசி உடல்நலத்துக்காக ஆதரவாளர்கள் வேண்டுதல்

ஹைதராபாத்தை மையமாக கொண்ட ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றுவிட்டு டெல்லி திரும்பியபோது, அவரைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. அவர் சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். எம்.பி-யான ஒவைசி மீரட்டில் இருந்து டெல்லி சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சச்சின் என்பவரை விசாரித்தபோது கொலை செய்யும் நோக்கத்தில்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், தான் பா.ஜ.க உறுப்பினர் என்றும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து அவருக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க முன்வந்தது. ஆனால், ஒவைசி அதை ஏற்க மறுத்துவிட்டார்.

ஒவைசி

அதோடு, ``மகாத்மாவைக் கொலை செய்தவர்கள்தான் என்னையும் கொலை செய்ய முயன்றுள்ளனர்" என்று தெரிவித்திருந்தார். அதையடுத்து, ஒவைசி நீண்ட நாள் வாழவேண்டும் என்று அவர் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஹைதராபாத்தில் ஒவைசி நீண்ட நாள் வாழவேண்டும் என்று வேண்டிக்கொண்டு தொழிலதிபர் ஒருவர் 101 ஆடுகளை பலி கொடுத்து அனைவருக்கும் தடபுடலாக விருந்து படைத்தார். இந்த நிகழ்வில் ஒவைசி கட்சியின் எம்.எல்.ஏ அகமத் பலாலா உட்பட ஒவைசி ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒவைசியின் கட்சி வரும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிடுகிறது. ஒவைசியின் கட்சி போட்டியிடுவதால் அது சமாஜ்வாடி கட்சிக்குத்தான் பின்னடைவாக கருதப்படும். சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்குத்தான் அதிகமான முஸ்லிம்கள் வாக்களிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: உத்தரபிரதேசம்: ஒவைசி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கைது! - யார் அவர்கள்?



from தேசிய செய்திகள் https://ift.tt/GIX2orN

Post a Comment

0 Comments