உ.பி தேர்தல்: அகிலேஷ் யாதவுக்கு எதிராக மத்திய அமைச்சரை களம் இறக்கிய பாஜக!

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு தாவுவது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது சில தலைவர்கள் கட்சி மாறுவது வழக்கமாக நடந்து வருகிறது. அந்த வகையில், தற்போது சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு மிகவும் நெருக்கமான சிவகுமார், அந்தக் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார். சிவகுமார் பா.ஜ.க-வுக்கு தாவியிருப்பது சமாஜ்வாடி கட்சிக்கு பலத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ். சமாஜ்வாடி கட்சியின் சட்டமேலவை உறுப்பினர் ரமேஷ் மிஸ்ரா ஆகியோர் சமாஜ்வாடியிலிருந்து விலகி பா.ஜ.க-வுக்குச் சென்று விட்டனர். அதேபோல, கடந்த 13-ம் தேதி பா.ஜ.க-விலிருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்த எம்.எல்.ஏ.பாலா பிரசாத் அந்தக் கட்சியிலிருந்து விலகி மீண்டும் பா.ஜ.க-வில் இணைந்து விட்டார்.

தேர்தல் பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ்

கடந்த 20-ம் தேதி முலாயம் சிங் யாதவின் மைத்துனர் பிரமோத் குப்தாவும் சமாஜ்வாடி கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார். குடும்பத்தில் உள்ளவர்களே பா.ஜ.க-வில் தொடர்ச்சியாக சேர்ந்து வருவது அகிலேஷ் யாதவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

முலாயம் சிங் யாதவ் - சிவகுமார்

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் திங்கள்கிழமை, தான் போட்டியிட இருக்கும் கர்ஹல் தொகுதியில் தன் ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், ``உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நாட்டின் அடுத்த நூற்றாண்டு வரலாற்றை தீர்மானிக்கும். மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர். எதிர்மறையான கொள்கையை தோற்கடியுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். அகிலேஷ் யாதவுக்கு எதிராக பா.ஜ.க சார்பாக மத்திய அமைச்சர் எஸ்.பி.சிங் பாஹல் போட்டியிட இருக்கிறார்.

எஸ்.பி.சிங்

எஸ்.பி.சிங்கும் திங்கள்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தார். உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்க இருக்கிறது. முதல் முறையாக சட்டமன்றதேர்தலில் போட்டியிடும் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹல் தொகுதியில், தொடர்ச்சியாக கடந்த மூன்று தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றிருக்கிறத். இந்தத் தொகுதியில் 1.4 லட்சம் யாதவ வாக்காளர்களும், 14 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களும் இருக்கின்றனர். இது தவிர இதர பிற்படுத்தப்பட்ட வாக்காளர்கள் 34 ஆயிரம் பேர் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/3n7woHmZX

Post a Comment

0 Comments