கேரளத்தில் கடந்த சில நாள்களாக இன்ஸ்டாகிராமில் கன்னியாஸ்திரிகளின் உடை அணிந்த இரண்டு பெண்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கன்னியாஸ்திரிகள் சபைக்குச் செல்லும்போது அணியும் உடையை அணிந்த இரண்டு பெண்கள் நெருக்கமாகக் கட்டிப்பிடித்தபடியும், சிரித்தபடியும் போஸ் கொடுக்கும் அந்தப் புகைப்படங்கள் சபை விசுவாசிகளை அவமானப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதே சமயம் அந்த போட்டோவுக்கு ஆதரவாகவும் ஒரு சிலர் பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.
அஞ்சனா, தேவிகா ஆகிய மாடல்கள் போஸ்கொடுக்க அந்த போட்டோவை ஷூட் செய்தவர் புகைப்பட கலைஞர் யாமி. கொல்லத்தைச் சேர்ந்த யாமி பி.பி.ஏ ஏவியேஷன் படித்துவிட்டு பெங்களூர் ஏர்போட்டில் சில ஆண்டுகள் வேலைசெய்தார். பின்னர் போட்டோகிராபி மீதான காதலால் வேலையை விட்டுவிட்டு எர்ணாகுளத்தில் வசித்துவருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் புகைப்படத்துறையில் இருக்கிறார். அவரது போட்டோக்கள் மீதான விவாதம் பெரிதானதால் புகைப்படம் பற்றி விளக்கம் அளித்திருக்கிறார் யாமி.
இதுபற்றி யாமி கூறுகையில், "தேவாலய உடை அணிந்த இரண்டு பெண்கள் பரஸ்பரம் கட்டிப்பிடிக்கிறார்கள். ஒன்றாகச் சிரிக்கிறார்கள். இதை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதுதான் பிரச்னை. மக்கள் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தவில்லை. உடைதான் அவர்களுக்குப் பிரச்னை. நான் ஒரு கான்செப்ட் எடுத்து படமாக்கினேன். அது அங்கேயே முடிந்துவிட்டது. அந்த போட்டோவை பார்த்து மக்கள் அது, இது என ஏதாவது சொன்னால் அது அவர்களின் பார்வையில் உள்ள குழப்பம்.
தேவாலய உடையை அணிந்ததால் அவர்கள் பெண்கள் இல்லை என ஆகிவிடுமா? ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய விருப்பத் தேர்வுகள் என்பது உண்டு. அதைமட்டுமே நான் அந்த போட்டோ ஷூட்டில் வெளிப்படுத்தியுள்ளேன். மற்றபடி தன்பால் ஈர்ப்பாகவோ, காதலாகவோ அல்லது அதுபோன்ற தரத்திலான போட்டோவாக அதை பிளான் செய்யவில்லை. ஒவ்வொருவருக்கும் இதில் ஒவ்வொரு விருப்பங்கள் உள்ளன. நான் என் விருப்பத்துக்கேற்ப அந்தப் புகைப்படங்களை எடுத்தேன்.
சபைக்குரிய ஆடையை அணிந்துகொண்டு இரண்டு பெண்கள் நிற்கும் போட்டோவில் சிலர் பிரச்னையை தேடுகின்றனர். அந்த படத்தின் 'ஃபன் சைடு' மட்டுமே நான் ஆலோசித்தேன். சிலர் என் இன்பாக்ஸில் வந்து போட்டோ ரொம்ப கிளியர் என போட்டுள்ளார்கள். சிலரோ எதற்காக இதுபோன்ற போட்டோக்களை எடுக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள். அது என் சுதந்திரம் என்பதைவிட வேறு என்ன நான் சொல்ல முடியும்? எனக்கு அந்த போட்டோவை எடுக்க சுதந்திரம் இருப்பதுபோன்று, கமென்ட் செய்வதற்கும் அவர்களுக்கு சுதந்திரம் இருப்பதாகக் கருதுகிறேன். மற்றபடி இதில் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை.
இந்த போட்டோக்களைப் பாராட்டியும், எதிர்ப்பு தெரிவித்தும் பல கமென்ட்டுகள் வருகின்றன. இது எனக்கு புதிது அல்ல. பல போட்டோக்கள் இதுபோன்று விவாதம் ஆகியிருக்கின்றன. ஆடையின்பெயரைச் சொல்லி சிலர் ஜட்ஜ் ஆக மாறி கமென்ட் செய்வதில் எனக்கு கருத்துவேறுபாடு உண்டு. அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருப்பதே எனது வழக்கம்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/tPrcjfoTQ
0 Comments